ஊடகவியலாளர் லசந்த கொலைச் சந்தேகநபர்கள் விடுதலை

வெள்ளி, ஏப்பிரல் 16, 2010

இலங்கையின் பிரபல ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க, மற்றும் பல செய்தியாளர்கள் கொலை சம்பந்தமாகக் கைது செய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த 17 இராணுவத்தினர் விடுவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.


சண்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க கடந்த ஆண்டு சனவரி 8 இல் இனந்தெரியாதோரினால் தலைநகர் கொழும்பில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார். இவரது கொலை தொடர்பாகவும், பின்னர் ரிவிர பத்திரிகை ஆசிரியர் உபாலி தென்னக்கோன் கொலை முயற்சி, கீத் நுவார் என்ற மூத்த செய்தியாளரும் கடத்தப்பட்டு தாக்கப்பட்டமை, போன்ற சம்பவங்களில் இந்த இராணுவ உளவுப் பிரிவுப் படையினருக்கு தொடர்பு இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டிருந்தனர்.


இப்போது இவர்கள் இந்தச் சம்பவங்களில் சம்பந்தப்பட்டிருப்பதற்கு எவ்வித ஆதாரங்களும் இல்லை என காவல்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்ததை அடுத்தே இவர்கள் விடுவிக்கப்பட்டனர்.


எனினும், பிரிகேடியர் துமிந்த கெப்பிதிவலன என்ற மூத்த இராணுவ அதிகாரி உட்பட மேலும் பல படையினர் லசந்த கொலை தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருவதாக அவர்கள் தெரிவித்தனர். இந்த விசாரணைகள் குறித்த அறிக்கை ஒன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீதிபதி காவல்துறையினரிடம் உத்தரவிட்டுள்ளார்.


இக்கொலைகளுக்கும் தமக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என அரசாங்கம் கூறி வருகிறது.

மூலம்

தொகு