உலங்குவானூர்தி விபத்தில் சிக்கிய அருணாச்சலப் பிரதேச முதல்வரின் உடல் மீட்பு

புதன், மே 4, 2011

கடந்த சனிக்கிழமை அன்று இடம்பெற்ற உலங்குவானூர்தி விபத்தில் காணாமல் போயிருந்த அருணாச்சலப் பிரதேச முதல்வர் டோர்ஜி காண்டு, மற்றும் நால்வரில் உடல்கள் அம்மாநிலத்தின் லோப்தாங் பகுதியில் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக இந்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளார்.


அருணாச்சலப் பிரதேச முதல்வர் டோர்ச்சி காண்டு

உலங்குவானூர்தியின் உடைந்த பாகங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இதனை அடுத்து காண்டு இறந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த 5 நாட்களாக அவரைத் தேடும் பணி நடந்து வந்தது. இந்நிலையில் இன்று அவரது உலங்குவானூர்தி லோப்தாங் என்ற இடத்தில், ஜாங் அருவிப்பகுதியில் விபத்துக்குள்ளாகி நொறுங்கிக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு ஹெலிகாப்டரின் சிதறிய பாகங்களை தேடுதல் படையினர் கண்டுபிடித்தனர். அந்த இடத்தில் அழுகிய நிலையில் உடல்கள் இருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அந்த உடல்களை தேடுல் படையினர் மீட்டு பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைத்தனர்.


டோர்ஜி காண்டுவின் உடலை அவரது உறவினரான பஞ்சாயத்து தலைவர் துப்தென் அடையாளம் காட்டினார் என மத்திய அமைச்சர் பி.கே.ஹண்டிக் தெரிவித்தார். இதர 4 பேரின் உடல்கள் அடையாளம் காணமுடியாத அளவுக்கு எரிந்துபோயுள்ளதாக ஹண்டிக் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


டோர்ஜி காண்டு கடந்த சனிக்கிழமை தவாங்கில் இருந்து இடாநகருக்கு பவன் ஹான்ஸ் நிறுவனத்தின் ஹெலிகாப்டரில் புறப்பட்டார். புறப்பட்ட 20 நிமிடங்களில் அந்த ஹெலிகாப்டர் அனைத்து தகவல் தொடர்பையும் இழந்தது. அவரைத் தேடும்பணியில் ராணுவம், எல்லைப் பாதுகாப்புப் படையினர், காவல்துறையினர் 3000 வீரர்கள் உட்பட 10,000 இற்கும் அதிகமானோர் ஈடுபடுத்தப்பட்டனர். அண்டைய நாடான பூட்டானிலும் தேடுதல் நடத்தப்பட்டது. காண்டுவின் மகன் தஷி த்செரிங்க் காண்டுவும் இத்தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தார்.


தொடர்புள்ள செய்திகள் தொகு

மூலம் தொகு