அருணாச்சலப் பிரதேசத்திற்கு சீனா உரிமை கோரல்

வெள்ளி, அக்டோபர் 16, 2009

அண்மையில் இந்தியாவின் மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தை சீனா தனது பகுதி என அறிவித்தமைக்கு இந்தியா கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் ஆள்புல எல்லைகள் தொடர்பாக சீனா நடந்துகொள்ளும் முறைகள் தொடர்பாக இந்தியா கடும் கவனமெடுத்துள்ளதுடன் சீனாவுக்கு அதிருப்தியையும் வெளியிட்டுள்ளது.


அருணாச்சலப் பகுதியை சீனா உரிமைகோருவது, பாகிஸ்தான் கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீர் பிரதேசத்தில் எரிசக்தி வேலைகளில் ஈடுபட ஒப்பந்தம் கைச்சாத்திட்டமை, இராணுவ உதவிகளை பாகிஸ்தானுக்கு வழங்கியமை போன்ற சீனாவின் நடத்தைகள் இந்தியாவை ஆத்திரமூட்டியுள்ளது.


இது குறித்து இந்திய வெளிநாட்டமைச்சின் பேச்சாளர் விஷ்ணு பிரகாஷ் விசேட அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார்.


இந்திய, சீன நீண்டகால உறவுகளைப் பாதுகாப்பதில் சினா அக்கறையுடன் நடந்து கொள்ளுமென நம்புகின்றோம். அருணாச்சலப் பிரதேசம் தொடர்பாக இந்தியாவின் நிலைப்பாட்டை சீனா புரிந்துள்ளதாகவும் கருதுகிறோம் என இந்திய வெளிநாட்டமைச்சின் பேச்சாளர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ராஸா கிலானி தற்போது சீனாவிலுள்ளார். அவர் பாகிஸ்தானுக்குத் தேவையான இராணுவ, கைத்தொழில் வர்த்தக உதவிகளைப் பெறுவதற்கான உறுதிமொழிகளை சீனாவிடமிருந்து பெற்றுள்ளார். சென்ற மாதம் பாகிஸ்தானின் கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீரில் 12.6 பில்லியன் டொலர் செலவில் பாரிய அணைக்கட்டு அமைக்க சீனா ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டது.


இந்து நதியைக் குறுக்கிட்டு கட்டப்படும் இந்த அணையிலிருந்து சீனாவுக்கு தேவையான மின்சாரத்தைப் பெறும் உரிமையை பாகிஸ்தான் வழங்கியுள்ளது. இவ்வாறான நடவடிக்கைகளால் இந்தியா சீனா மீது அதிருப்தியடைந்துள்ளதுடன் இவ்வாறான விடயங்களின் ஆபத்து குறித்து பாகிஸ்தானிடமும் விளக்கியுள்ளது.

மூலம் தொகு