உரோமானி மக்களை பிரான்சு நாடு வெளியேற்றுவதற்கு எதிர்ப்பு

This is the stable version, checked on 19 அக்டோபர் 2013. Template changes await review.

செப்டம்பர் 5, 2010

பிரான்சு நாட்டில் பல்லாண்டுகளாக வாழ்ந்துவந்த உரோமானி புலம்பெயர் மக்களை வெளியேறும்படி அந்நாட்டு அதிபர் சார்க்கோசி உத்தரவிட்டதைத் தொடர்ந்து பலத்த எதிர்ப்புப் போராட்டம் வெடித்துள்ளது. பிரான்சில் பெரும்பாலும் கூடாரங்களிலும் தற்காலக் குடியிருப்புகளிலும் தங்கியிருந்த உரோமானி மக்களை உருமேனியா, பல்கேரியா போன்ற அவர்களது பூர்வீக நாடுகளுக்கே திரும்பும்படி வன்முறையாக நாடு கடத்துவது மனித உரிமை மீறல் ஆகும் என்று பல மனித உரிமை பாதுகாப்புக் குழுக்கள் கருத்துத் தெரிவித்துள்ளன.


பிரான்சில் ரோமா மக்கள் (ஜிப்சிகள்)

கடந்த சூலை மாதம் பிரான்சு நாட்டின் வடமேற்கிலுள்ள லுவார் பள்ளத்தாக்கில் ஓர் உரோமானி இளைஞர் பிரான்சு நாட்டுக் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதைத் தொடர்ந்து கலகம் வெடித்தது. அரிவாள், இரும்புக் கம்பி போன்ற ஆயுதங்களோடு உரோமானியர் பலர் காவல் நிலையத்தைத் தாக்கி, மரங்களை வெட்டிச் சாய்த்து, ஊர்திகளுக்கும் தீவைத்தனர்.


இப்பின்னணியில் பிரான்சு நாட்டு அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கத் தொடங்கியது. அனுமதியின்றி உருவான 300க்கும் அதிகமான உரோமானி கூடாரங்களும் குடியிருப்புகளும் அகற்றப்பட வேண்டும் என்று அமைச்சரவை முடிவுசெய்தது. உரோமானி கூடாரங்களில் சட்டவிரோத செயல்கள் நடப்பதாகவும், குழந்தைகள் பிச்சையெடுக்கும் இழிநிலைக்குத் தள்ளப்படுவதாகவும், சட்டமீறல் நிகழ்வதாகவும் அரசு குற்றம் சாட்டியது. பிரான்சு நாட்டின் பாதுகாப்புக் கருதி, அனுமதியின்றி அல்லது வேலையின்றி வாழும் உரோமானி மக்களை மூன்று மாதங்களுக்குள் வெளியேற்ற அரசு துணிந்தது.


கடந்த பல நூற்றாண்டுகளாகவே உரோமானி புலம்பெயர் மக்கள் பலவித இன்னல்களுக்கு ஆளாகிவந்துள்ளனர். இந்திய துணைக்கண்டத்தின் வட மேற்குப் பகுதியே உரோமானி மக்களின் பூர்வீகம் என்று கருதப்படுகிறது. அவர்கள் பேசுகின்ற மொழி, கடைப்பிடிக்கின்ற பழக்க வழக்கங்கள் பல அவர்கள் வடமேற்கு இந்தியாவோடு தொடர்புடையவர்களே என்பதற்கு ஆதாரமாக உள்ளன. இந்தியாவில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக கி.பி. 11ஆம் நூற்றாண்டின்போது இம்மக்கள் நடு ஆசியாவுக்கும் பின்னர் கிழக்கு ஐரோப்பாவுக்கும் சென்றனர். அங்கு பெரும்பாலும் புலம்பெயர் மக்களாக, நாடோடிகள் போன்று வாழ்க்கை நடத்திவந்துள்ளனர்.

எதிர்ப்புப் போராட்டம்

உரோமானி மக்களை வெளியேற்றுவது மனித உரிமை மீறல் ஆகும் என்று கூறி, நேற்று பாரிசில் மாபெரும் எதிர்ப்பு ஊர்வலம் நடந்தது. அதில் பல்லாயிரக் கணக்கானோர் கலந்துகொண்டு, சர்க்கோசி அரசைக் கண்டனம் செய்தனர். பிரான்சு நாட்டு அரசு சிறுபான்மை மக்களின் உரிமையை மீறி, வலதுசாரிக் குழுக்களின் ஆதரவைப் பெறவும், அரசியல் இலாபம் ஈட்டவுமே உரோமானி மக்களை வெளியேற்றுகிறது என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.


பிரான்சு நாட்டு மக்களும் அரசின் இந்த தீவிர நடவடிக்கையை முழுமையாக ஆதரிக்கவில்லை. மேலும், இச்செயல் மனித உரிமை மீறல் ஆகும் என்று ஐக்கிய நாடுகள் அவையும் வத்திக்கான் நாடும் கூறியுள்ளன.

தொடர்புள்ள செய்திகள்

தொகு

மூலம்

தொகு