ரோமா ஜிப்சிகளை பிரான்ஸ் ருமேனியாவுக்குத் திருப்பி அனுப்புகிறது

This is the stable version, checked on 22 சூலை 2018. Template changes await review.

வெள்ளி, ஆகத்து 20, 2010

பிரெஞ்சு அரசுத்தலைவர் நிக்கொலா சார்க்கோசியின் சர்ச்சைக்குரிய திட்டத்தின் படி, பிரான்சில் இருந்து நாடுகடத்தப்பட்ட ரோமா மக்கள் (ஜிப்சிகள்) பலர் ருமேனியா வந்து சேர்ந்தனர்.


பிரான்சில் ரோமா மக்கள் (ஜிப்சிகள்)

இதுவரை 86 பேர் ருமேனியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், மேலும் நூற்றுக்கணக்கானோர் எதிர்வரும் வாரங்களில் வெளியேற்றப்படுவார்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இவர்கள் வாழ்ந்து வந்த முகாம்கள் அனைத்தும் மூடப்பட்டு வருகின்றன.


மனிதத்தன்மை அற்ற, வருந்தத்தக்க முறையில் வாழ்ந்து வந்த இம்மக்களை வெளிற்றுவது "மனிதாபிமான நடவடிக்கை" என பிரெஞ்சு அரசு கூறியுள்ளது.


ஆனாலும் பிரெஞ்சு அரசின் இந்நடவடிக்கையை மனிட உரிமை அமைப்புகள், மற்றும் ருமேனிய அரசு ஆகியன வன்மையாகக் கண்டித்துள்ளன.


"பிரெஞ்சு அரசின் நிலையை நாம் புரிந்து கொள்கிறோம். அதே நேரத்தில், ருமேனியக் குடிமக்கள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் கட்டுப்பாடின்றி சென்று வரும் உரிமை மதிக்கப்பட வேண்டும்," என ருமேனிய அரசுத்தலைவர் டிரயான் பசெஸ்கு தெரிவித்தார்.


ஆனாலும், ரோமா மக்கள் வெளியேற்றம் குறித்த நடவடிக்கைக்கு உதவ தமது காவல்துறையினரை நாம் பிரான்சுக்கு அனுப்பத் தயாராயுள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.


இவ்வாறு வெளியேற்றப்ப்பட்டவர்களுள் ஒருவரான கப்ரியேல் என்பவர் செய்தி நிறுவனம் ஒன்றுக்குத் தெரிவிக்கையில், பிரான்சில் இப்போது வாழ்வது மிகவும் ”சிரமம்” என்றும், ஆனாலும் ருமேனியாவில் வேலை இல்லை என்பதால் தாம் பிரான்சில் வசிப்பதையே விரும்புவதாகவும் தெரிவித்தார்.


ருமேனியா அல்லது பல்கேரியாவைச் சேர்ந்த ரோமா மக்கள் ஐரோப்பிய ஒன்றியக் குடிமக்களாக இருந்தாலும், பிரான்சில் அவர்கள் வசிப்பதற்கு பிரென்சு சட்டத்தின்படி வேலை அனுமதி பெற்றிருக்க வேண்டும். இதனால் ரோமா மக்கள் பெரும்பாலானோர் அங்கு சட்டவிரோதமாகவே வாழ்ந்து வருகின்றனர்.


பிரான்சில் இருந்து வெளியேற்றப்பட்டோர் ஒவ்வொருவருக்கும் 300 யூரோக்களும் ($384), ஒவ்வொரு குழந்தைக்கும் கூடுதலாக 100 யூரோக்களும் கொடுக்கப்பட்டன.


அடுத்த மூன்று மாதங்களில் சட்டவிரோத ரோமா முகாம்கள் அனைத்தும் மூடப்பட்டு விடும் என பிரெஞ்சு அரசு அறிவித்துள்ளது.


கிரெனோபிள் என்ற பிரான்சின் தெற்கு நகரத்தில் கடந்த மாதம் சுற்றுலாப் பயணிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் இடம்பெற்ற கைகலப்புகளை அடுத்தே பிரெஞ்சு அரசு ரோமா மக்களை வெளியேற்ற ஆரம்பித்துள்ளது.

மூலம்

தொகு