உத்தராகண்ட வெள்ளம்: காணாமல் போன 5,700 பேர் இறந்து விட்டதாக அறிவிப்பு

This is the stable version, checked on 23 சூலை 2018. Template changes await review.

திங்கள், சூலை 15, 2013

இந்தியாவின் வட மாநிலமான உத்தராகண்டத்தில் கடந்த மாதம் இடம்பெற்ற வரலாறு காணாத வெள்ளப்பெருக்கில் சிக்கி காணாமல் போன 5,700 பேருக்கு மேற்பட்டோர் இறந்து விட்டதாக அம்மாநில அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இறந்த நபர்களின் குடும்பத்தினருக்கு நட்ட ஈடு வழங்கப்படும் எனவும் மாநில அரசு அறிவித்துள்ளது.


முன்னதாக 600 பேர் இறந்ததாக அரசு உறுதிப்படுத்தியிருந்தது. கடந்த சூன் மாதத்தில் வட மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் உத்தராகண்ட மாநிலமே அதிகம் பாதிப்புக்குள்ளானது. கடந்த 80 ஆண்டுகளில் இம்முறையே வெள்ளப்பெருக்கினால் மிக அதிக அளவு சேதம் ஏற்பட்டுள்ளது. 4,000 கிராமங்கள் பாதிப்படைந்தன. இமாலய மலைப்பிரதேசத்தில் 100,000 இற்கும் அதிகமானோர் மீட்கப்பட்டனர். ஆறுகள் பெருக்கெடுத்தனால் பல கிராமங்கள் அடியோடு அழிந்தன. சுற்றுலாப் பயணிகள் பலர் இவ்வெள்ளத்தில் சிக்குண்டு உயிரிழந்தனர்.


5,748 பேர் காணாமல் போயிருந்தனர். இவர்களைப் பற்றிய தகவல்கள் இல்லாததால், இவர்கள் அனைவரும் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் குறைந்தது 500,000 ரூபாய்கள் நட்ட ஈடாக வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


வெள்ளத்தினால் சேதமடைந்த வரலாற்றுப் புகழ் மிக்க கேதாரநாத் கோவில் அடுத்த ஓராண்டு காலத்திற்கு பொது மக்களின் வழிபாட்டிற்கு மூடப்பட்டிருக்கும் என அரசு அறிவித்துள்ளது.


மூலம்

தொகு