உக்ரைனில் அரசுத்தலைவர் பதவியில் இருந்து யானுக்கோவிச் நீக்கம்

This is the stable version, checked on 23 சூலை 2018. Template changes await review.

செவ்வாய், பெப்பிரவரி 25, 2014

உக்ரைனில் கடந்த சில வாரங்களாக இடம்பெற்ற அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை அடுத்து அரசுத்தலைவர் விக்டர் யானுக்கோவிச் பதவியில் இருந்து அகற்றப்பட்டார். இதனை அடுத்து புதிய இடைக்கால அரசுத்தலைவராகவும், நாடாளுமன்ற அவைத்தலைவராகவும் அலெக்சாந்தர் துர்ச்சீனொவ் தேர்தெடுக்கப்பட்டார். ஐரோப்பிய ஆணையம் துர்ச்சீனொவுக்குத் தமது ஆதரவை அறிவித்துள்ளது.


யானுக்கோவிச் பதவியில் இருந்து அகற்றப்பட்டமைக்கும், ஐரோப்பிய-சார்பு அரசு ஒன்று அமைக்கப்பட்டமைக்கும், உருசிய மொழி பேசும் சிறுபான்மையின உக்ரைனிய மக்கள் தமது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். உருசியாவும் இது குறித்து கடும் கோபம் உற்றிருந்தாலும், தாம் இவ்விடயத்தில் தலையிடப்போவதில்லை என உருசியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கே லாவ்ரொவ் கூறியுள்ளார்.


இதற்கிடையில் எதிர்க்கட்சியுடனான கூட்டு அரசு அமைக்கப்படுவது பின் போடப்பட்டுள்ளதாக புதிய தலைவர் அறிவித்துள்ளார். இது குறித்து மேலும் பேச்சுக்கள் இடம்பெறும் என அவர் கூறினார்.


பதவியில் இருந்து அகற்றப்பட்ட விக்டர் யானுக்கோவிச் தற்போது எங்குள்ளார் என அறியப்படாவிட்டாலும், அவருக்கு எதிராகக் கைதாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடைசியாக இவர் கடந்த ஞாயிறன்று கிரிமியா பகுதியில் பலக்கிளாவா நகரில் காணப்பட்டார் என செய்தியாளர்கள் கூறுகின்றனர். நாட்டை விட்டு உருசியாவுக்கு செல்வதற்கு அவர் எடுத்த முயற்சி கைகூடவில்லை. எல்லைக் காவலர்கள் அவரைத் தடுத்து நிறுத்தியுள்ளனர்.


அரசு எதிர்ப்பாளர்களைப் படுகொலை செய்தமைக்காக இவர் மீதும் இவரது அதிகாரிகள் மீதும் குற்றவியல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரம் மட்டும் 80 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.


இரண்டாண்டுகளாக சிறை வைக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் யூலியா திமோசென்கோ சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். தாம் பிரதமர் பதவிக்குப் போட்டியிடப்போவதில்லை என அவர் அறிவித்துள்ளார். ஆனாலும், அரசுத்தலைவர் பதவிக்குப் போட்டியிடுவாரா என்பது குறித்து அவர் எதுவும் கூறவில்லை.


கடந்த ஆண்டு நவம்பரில் யானுக்கோவிச் ஐரோப்பிய ஒன்றியத்துடனான உடன்பாட்டை இரத்துச் செய்து உருசியாவுடன் கூட்டுச் சேர முடிவெடுத்ததை அடுத்து அங்கு அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் தொடங்கின. ஆர்ப்பாட்டங்களை ஒருங்கிணைக்க யூரோமைதான் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.


மூலம்

தொகு