ஈழப்போர்: தமிழர்களைக் கொலை செய்யும் 'உத்தரவு மேலிடத்தில் இருந்து வந்தது'

There are no reviewed versions of this page, so it may not have been checked for adherence to standards.

புதன், மே 19, 2010


இலங்கையில் மே 2009 இல் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின்போது இலங்கைப் படையினரால் பிடிக்கப்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் ”உயர்மட்டத்தில்” இருந்து வந்த உத்தரவை அடுத்தே படுகொலை செய்யப்பட்டதாக இலங்கை இராணுவத்தின் உயர் அதிகாரி ஒருவர் பிரித்தானியாவின் “சனல் 4” தொலைக்காட்சிக்குத் தெரிவித்துள்ளார்.


பிடிக்கப்பட்ட பொதுமக்களின் காணொளியையும் புகைப்படங்களையும் வெளியிட்ட சனல்-4 தொலைக்காட்சி, அவ்வாறு இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டவர்களின் புகைப்படங்கள் இலங்கை படைச்சிப்பாய் ஒருவரினால் எடுக்கப்பட்டவை என்றும் தெரிவித்துள்ளது. அந்த படுகொலைகளை மேற்கொண்ட இலங்கை இராணுவ சிப்பாய் ஒருவரினதும் போர் முனையில் கடமையிலிருந்த இராணுவ தளபதிகளில் ஒருவரினதும் கருத்தினையும் மேற்கோள் காட்டி சனல் 4 நேற்று செய்தி வெளியிட்டிருக்கிறது.


எமது தளபதி எல்லோரையும் படுகொலை செய்யுமாறு உத்தரவிட்டார். ஆகவே, நாங்கள் எல்லோரையும் கொலை செய்தோம்.

—இலங்கை இராணுவ வீரர்

"எமது தளபதி எல்லோரையும் படுகொலை செய்யுமாறு உத்தரவிட்டார். ஆகவே, நாங்கள் எல்லோரையும் கொலை செய்தோம்" என்று படுகொலைகளை மேற்கொண்ட இராணுவ வீரர் ஒருவர் சனல் - 4 தொலைக்காட்சிக்கு தெரிவித்தார். "விடுதலைப்புலிகளின் முக்கியமானவர்கள் எவரையும் வைத்துப் பாதுகாக்கும் திட்டம் எதுவும் இல்லாததால், அவர்கள் அனைவரும் படுகொலை செய்யப்பட்டார்கள். இதற்கான உத்தரவு நிச்சயமாக உயர்மட்டத்திலிருந்தே கிடைத்திருக்கவேண்டும்" என்று இலங்கை இராணுவத்தின் மூத்த தளபதிகளில் ஒருவர் தெரிவித்தார் என்றும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.


விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் 13 வயது மகன் இலங்கை இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டு அவரது தந்தையார் - தலைவர் பிரபாகரன் - எங்கு உள்ளார் என்று விசாரணை செய்யப்பட்டு பின்னர் சுடப்பட்டார் என்றும் கூறியுள்ளார்.


இந்த செய்திகள் மற்றும் படங்கள் குறித்து பிரித்தானியாவில் உள்ள இலங்கைத் தூதரகத்திடம் சனல் - 4 செய்தி நிறுவனம் கேட்டபோது, ”இலங்கை படையினர் மனிதாபிமான நடவடிக்கையினையே கடந்த வருடம் மேற்கொண்டிருந்தனர் அதில் பொதுமக்கள் எவருக்கும் எந்த இழப்பும் எற்படவில்லை. அவ்வாறு படையினர் குற்றச்செயல்களில் ஈடுபட்டார்கள் என்று வெளிவரும் செய்திகள் எதிலும் எந்த உண்மையும் இல்லை”, என்று தெரிவித்திருக்கிறது.

மூலம்

தொகு