ஈழத்து நாடகக் கலைஞர் ஸ்ரீதர் பிச்சையப்பா காலமானார்

சனி, பெப்பிரவரி 20, 2010


இலங்கையின் பிரபல நாடகக் கலைஞர் ஸ்ரீதர் பிச்சையப்பா தனது 47வது அகவையில் சுகயீனம் காரணமாக இன்று சனிக்கிழமை காலை 8.00 மணியளவில் கொழும்பில் காலமானதாக வீரகேசரி பத்திரிகை தெரிவித்துள்ளது.


1963 ஜூலை 20 ஆம் திகதி பிறந்த ஸ்ரீதர் பிச்சையப்பா, சிறு வயது முதலே கலைத்துறையில் ஆர்வம் கொண்டவர்.


இவர் ஒரு பிரபலமான நாடகக் கலைஞர், பின்னணிப் பாடகர், பாடலாசிரியர், இயக்குனர், எழுத்தாளர், 'மிமிக்ரி', மற்றும் ஓவியம் எனப் பல கலைத்துறைகளில் ஈடுபட்டு, தன்னை முழுமையாகக் கலைத் தாய்க்கு அர்ப்பணித்தவர் ஸ்ரீதர் பிச்சையப்பா. பல்கலைத் தென்றல் என அழைக்கப்பட்டவர்.


நாடறிந்த நாடகக் கலைஞரான டி.வி. பிச்சையப்பாவின் மகனான ஸ்ரீதர் 1962ம் ஆண்டு கொழும்பு கதிரேசன் வீதி இல்லத்தில் பிறந்தார். கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் பழைய மாணவர். தமது சிறுவயதில் இலங்கை வானொலியில் "சிறுவர் மலர்" நிகழ்ச்சி மூலம் சிறுவர் நாடகங்களில் பிரபல்யமாகி பின்னர் பாடகராக கலையுலகிற்கு பிரவேசித்தார். நவீன ஒவியத்தை வரைவதில் கொழும்பு மாவட்டத்தில் அவர் முன்னோடியாகவும் திகழ்ந்துள்ளார். அத்துடன் கவிதை எழுதுவதிலும் திறமை படைத்தவர்.


சில ஆண்டுகளுக்கு முன்னர் கிழக்கு மாகாண கலைநிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருந்த போது குண்டு வெடிப்பில் சிக்கி ஒரு கண்ணை இழந்தார்.


இவரது பூதவுடல் தற்போது அரசினர் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் நாளை 2.00 மணியளவில் மாதம்பிட்டிய மயானத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம் தொகு