இலங்கை வெள்ளப்பெருக்கில் மூன்றரை இலட்சம் பண்ணை விலங்குகள் உயிரிழப்பு

This is the stable version, checked on 22 சூலை 2018. Template changes await review.

புதன், சனவரி 19, 2011

அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் காரணமாக இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் ஆடுகள், மாடுகள், கோழிகள் உட்பட 3 இலட்சத்து 55 ஆயிரம் பண்ணை விலங்குகள் உயிரிழந்துள்ளதாக நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


231,000 கோழிகளும், 90,300 மாடுகளும், 32,400 ஆடுகளும் வெள்ளத்தில் உயிரிழந்துள்ளதாக பண்ணை விலங்கு வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் பேராதனையிலுள்ள பண்ணை விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இது குறித்து அறிவிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் வெள்ளப்பெருக்கினால் பண்ணை விலங்கு உற்பத்தித் துறைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து அமைச்சர் கலந்துரையாடியதுடன், நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பணிப்புரை விடுத்தார்.


கிழக்கில் அண்மையில் பெய்த அடை மழையினால் கோழிப்பண்ணைகளே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தின் சகல பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் பண்ணைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இங்கு 1,22,500 கோழிகளும் 63 ஆயிரம் மாடுகளும், 22,500 ஆடுகளும் உயிரிழந்துள்ளன.


அம்பாறை மாவட்டத்தின் 13 பிரதேச செயலாளர் பிரிவுகளில் ஒரு இலட்சம் கோழிகளும், 5400 ஆடுகளும், 15,100 மாடுகளும் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேநேரம், வெள்ளத்தினால் பாதிப்புற்று நான்கு காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக காட்டு மிருகங்கள் திணைக்களத்தின் பேச்சாளரொருவர் தெரிவித்தார். யானைக் குட்டி ஒன்று வெள்ளத்தினால் அடித்துச் செல்லப்பட்டு மரமொன்றில் தொங்கிய நிலையில் இறந்து கிடக்கக் கண்டுபிடிக்கப்பட்டது.


மூலம்

தொகு