இலங்கை முன்னாள் அமைச்சர் மகேஸ்வரன் கொலை வழக்கு: முக்கிய எதிரிக்கு தூக்குத்தண்டனை

செவ்வாய், ஆகத்து 28, 2012

இலங்கையின் முன்னாள் அமைச்சர் தியாகராஜா மகேஸ்வரன் படுகொலை தொடர்பாகக் கைதான பிரதான எதிரிக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுனில் ராசபக்ச நேற்று தூக்குத்தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தார்.


2008 சனவரி முதலாம் நாள் காலை கொழும்பு கொட்டாஞ்சேனை சிவன் கோவிலில் இடம்பெற்ற புத்தாண்டு வழிபாட்டில் கலந்து கொள்ளச் சென்ற முன்னாள் அமைச்சரும், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான மகேஸ்வரன் சுட்டுக் கொல்லப்பட்டார். மகேசுவரனையும், சந்திரகுமார் மகிந்தன் என்பவரையும் சுட்டுக் கொலை செய்தது தொடர்பில் ஜோன்சன் வலண்டைன் என்பவருக்கு எதிராக இலங்கை சட்டமா அதிபர் சார்பில் வழக்குப் பதியப்பட்டிருந்தது.


வழக்குத் தொடர்பிலான 150 பக்க தீர்ப்பு நேற்று மேல் நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.


சந்திரகுமார் என்பவரை சுட்டுக் கொன்றது தொடர்பில் போதிய ஆதாரங்கள் முன்வைக்கப்படாததால் அக்குற்றச்சாட்டில் இருந்து சந்தேக நபர் விடுவிக்கப்பட்டார். ஆனாலும் மகேஸ்வரனை சுட்டுக்கொலை செய்தது தொடர்பில் அவர் குற்றவாளியென நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி தெரிவித்தார். மகேசுவரனை சுடுவதற்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியில் படிந்திருந்த சந்தேகநபரின் இரத்தம் டி.என்.ஏ. சோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.


தனக்கு இந்த சம்பவத்துடன் எதுவித தொடர்பும் கிடையாது என குற்றவாளி தெரிவித்தார். அரசு சார்பில் வழக்கறிஞர் துசார குமாரவும், சந்தேகநபர் சார்பில் எஸ். ஜெயக்குமாரும் வாதாடினர்.


ஐக்கிய தேசியக் கட்சியின் அரசு இருந்தபோது யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தலில் வெற்றியீட்டி இந்து கலாச்சார அமைச்சர் பதவியையும் மகேஸ்வரன் வகித்திருந்தார். 2004 ஆம் ஆண்டு கொழும்பில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது இவர்மீது நடத்தப்பட்ட கொலைத்தாக்குதலில் காயங்களுடன் உயிர் தப்பினார். இவரது மனைவி விஜயகலா மகேஸ்வரன் கடந்த தேர்தலில் ஐதேக சார்பில் யாழ் மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.


மூலம் தொகு