இலங்கை கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் இணைந்து போட்டியிட முடிவு
சனி, சூலை 14, 2012
- 9 சூலை 2016: கிழக்கிலங்கை மாகாணசபைத் தேர்தல்கள் 2008
- 4 சூன் 2016: ஈழத் தமிழருக்கான நினைவேந்தல் சென்னை மெரீனா கடற்கரையில் நடந்தது
- 9 ஏப்பிரல் 2015: திருக்கோவில் விசேட அதிரடிப்படை முகாம் முற்றாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது
- 9 ஏப்பிரல் 2015: துன்புறுத்தியே வாக்குமூலம் பெறப்பட்டதாக யசீகரன் நீதிமன்றத்தில் தெரிவிப்பு
- 9 ஏப்பிரல் 2015: திசைநாயகத்திற்கு ஆதரவாக லண்டனில் பன்னாட்டு மன்னிப்பு அவை கவனயீர்ப்பு போராட்டம்
இலங்கையின் மூன்று மாகாணசபைத் தேர்தல்கள் எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இம்முறை நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிடுவதென நேற்றுக் கூடிய முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீடம் ஏகமனதாக முடிவெடுத்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
35 உறுப்பினர்கள் கொண்ட கிழக்கு மாகாண சபைக்கு முஸ்லிம் காங்கிரசுக்கு அம்பாறை மாவட்டத்தில் ஆறு வேட்பாளர்களும் மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று வேட்பாளர்களும் திருகோணமலை மாவட்டத்தில் மூன்று வேட்பாளர்களும் ஒதுக்கீடு செய்யப்படுவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் 11 உறுப்பினர்களும் அம்பாறை மாவட்டத்தில் 14 உறுப்பினர்களும் திருகோணமலை மாவட்டத்தில் 10 உறுப்பினர்களுமாக 35 பேர் இத்தேர்தலில் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
முஸ்லிம் காங்கிரஸ் ஆளும்தரப்பினருடன் இணைந்தே போட்டியிடுமென அமைச்சர்கள் தெரிவித்துவந்த அதேநேரம் முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடக்கூடாதென தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்திருந்தது. பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும் அரசுடன் இணைந்து கிழக்கு மாகாணத்தில் போட்டியிடவிருக்கிறது.
இதற்கிடையில், தேர்தல் நடைபெறும் சபரகமுவா மாகாணத்தில் மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணியும், மறைந்த சந்திரசேகரன் உருவாக்கிய மலையக மக்கள் முன்னணியும் இன்னும் சில மலையகத் தமிழ்க் கட்சிகளும் தமது கட்சியுடன் கூட்டுசேர்ந்து தமது கட்சியின் சேவல் சின்னத்திலேயே போட்டியிடத் தீர்மானித்துள்ளதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் பிபிசி செய்தியாளருக்குத் தெரிவித்தார்.
மூன்று மாகாணசபைகளுக்கும் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யும் கடைசி நாள் சூலை 19 ஆகும்.
மூலம்
தொகு- SLMC to contest under UPFA banner, டெயிலி மிரர், சூலை 14, 2012
- அரசுடன் இணைந்து போட்டியிட முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானம்! புரிந்துணர்வு ஒப்பந்தம் விரைவில் கைச்சாத்து! தமிழ்வின், சூலை 14, 2012
- சபரகமுவ தேர்தலில் மனோவுடன் கூட்டுச் சேர்கிறார் தொண்டமான், பிபிசி, சூலை 13, 2012