இலங்கை ஆணைக்குழுவில் சாட்சியமளிக்க பன்னாட்டு மனித உரிமைக் குழுக்கள் மறுப்பு

வெள்ளி, அக்டோபர் 15, 2010


இலங்கையில் இடம்பெற்ற ஈழப்போரின் போது இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பாக இலங்கை அரசு அமைத்துள்ள ”படிப்பினைகள் மற்றும் இணக்கப்பாட்டுக்கான ஆணைக்குழு” முன்பாக சாட்சியம் அளிக்க வருமாறு விடுக்கப்பட்ட அழைப்பை பன்னாட்டு மனித உரிமைக் குழுக்கள் பல நிராகரித்துள்ளன. இந்த ஆணைக்குழு நம்பகத்தன்மையற்றது எனவும் பக்கச்சார்பற்ற விசாரணை போன்ற விடயங்களில் சர்வதேச தரத்தில் அமையவில்லை என அக்குழுக்கள் கூறியுள்ளன.


பன்னாட்டு மன்னிப்பு அவை, மனித உரிமைகள் கண்காணிப்பகம், பன்னாட்டு இடர்ப்பாட்டுக் குழு ஆகியவையே இவ்வாறு கூறியுள்ளன. உண்மையை அறிவதற்கு இவ்வாணைக்குழுவுக்கு எவ்வித அதிகாரமும் இல்லை என அவதானிகள் தெரிவிக்கின்றனர்.


ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில், இடம்பெற்றுள்ள மனித உரிமை மீறல்கள் குறித்து தமக்கு பல நம்பிக்கையான தகவல்கள் கிடைத்திருப்பதாகக் கூறியுள்ள மன்னிப்புச் சபை, இலங்கையின் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள ஆணைகள், அதிகாரங்கள் போன்றவை, ஒட்டுமொத்தக் கொலைகள், சித்திரவதைகள் மற்றும் பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் ஆகியவை உள்ளடங்கிய குற்றச்சாட்டுக்களை விசாரிக்க போதுமானவை அல்ல என்றும் கூறியுள்ளது.


போர்க்குற்றங்களுக்காக இலங்கை அரசாங்கத்தை வெளிப்படையாக ஆதரித்தவர்களே இவ்வாணைக்குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.

—மது மல்கோத்ரா, மன்னிப்பு அவை

"இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக பக்கச்சார்பற்ற பன்னாட்டு ஆணைக்குழ்வே தேவையானது," என மனித உரிமைக் கண்காணிப்பகத்தின் கென்னத் ரொத் தெரிவித்தார்.


இருந்த போதிலும் இலங்கை அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட ஆணைக்குழுவின் விசாரணைகள் இலங்கையின் பல பகுதிகளிலும் கடந்த சில வாரங்களாக தனது விசாரணைகளை நடத்தி வருகின்றது. பல உள்நாட்டுத்தரப்பினரும் இந்த விசாரணைக்குழுவின் முன்பாக சாட்சியமளித்து வருகின்றனர்.


இலங்கை இராணுவமும் அவற்றுடன் இணைந்து செயற்படுவதாகக் கூறப்படும் ஆயுதக்குழுக்களும் தமது உறவினர்களை கடத்திச் சென்றதாகவும், கொலை செய்ததாகவும் பலர் அங்கு முறைப்பாடு செய்திருக்கிறார்கள். விடுதலைப் புலிகளின் முன்னாள் படைத் துறை பேச்சாளரான இளந்திரையன் எனப்படும் இராசையா சிவரூபனின் மனைவி உட்பட விடுதலைப் புலி முக்கியஸ்தர்களின் மனைவிமார்களும் சாட்சியமளித்தனர்.


இளந்திரையனின் மனைவி வனிதா, "2009 ம் ஆண்டு மே மாதம் 17 ம் தேதி தனது கணவர் இராணுவத்தினரால் காயத்திற்கு சிகிச்சையளிக்க வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதாகக் கூறி அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அதன் பின்னர் தனது கணவனைப் பற்றிய தகவல்கள் இல்லை," என தெரிவித்தார்.


மற்றுமொரு முன்னாள் விடுதலைப் புலி முக்கியஸ்தரான கிருஷ்ணபிள்ளை பிரபாகரனின் மனைவி பொபித்தா பிரபாகரன் சாட்சியமளிக்கையில், தமது குடும்பத்தினர் இடம்பெயர்ந்து வட்டுவான் என்னுமிடத்தில் ஏனைய பொது மக்களுடன் வந்த போது இராணுவத்தினர் விசாரணைக்கு எனக் கூறி பொது மக்கள் முன்னிலையில் கணவரை அழைத்துச் சென்றதாகவும் அதன் பின்னர் அவரைப் பற்றிய தகவல்களை தன்னால் அறிய முடியாமல் இருப்பதாகக் கூறினார்.


விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்த எழிலனின் மனைவி ஆனந்தி சசிதரன், தனது கணவர் மே 18 ஆம் தேதி இராணுவத்திடம் சரணடைந்ததாகவும், அதன் பிறகு அவரைக் காணவில்லை என்றும் கூறியிருந்தார்.


போரின் இறுதி கட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விடுதலைப் படையினரிடம் சரணடைந்ததாக இலங்கை அரசு கூறுகிறது. ஆனால் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலிகளின் பெயர் விபரங்களை வெளியிட இலங்கை அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. இதன் காரணமாக சட்டத்துக்குப் புறம்பான கொலைகள் நடக்க சாத்தியமிருப்பதாக மனித உரிமை அமைப்புக்கள் கவலை வெளியிட்டு வருகின்றன.


மூலம்