இலங்கை அமைச்சரவைக் கூட்டம் கிளிநொச்சியில் நடந்தது

This is the stable version, checked on 22 சூலை 2018. Template changes await review.

வியாழன், சூலை 15, 2010

1 ஆண்டுகளாக விடுதலைப் புலிகளின் நிருவாகத் தலைநகராயிருந்த கிளிநொச்சி நகரில் இலங்கை அமைச்சரவையின் சிறப்புக் கூட்டம் அரசுத்தலைவர் மகிந்த ராஜபக்ச தலைமையில் நேற்று இடம்பெற்றது.


கிளிநொச்சியில் தமது அமைச்சரவை கூட்டத்தை நடத்தியுள்ளதன் மூலம், நாடு முழுவதும் தனது ஆதிக்கத்தில் உள்ளது என்பதையும், பிரிவினைவாத நாட்கள் ஒழிந்து விட்டன என்பதையும் அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது என்று கொழும்பில் உள்ள பிபிசி செய்தியாளர் சார்ல்ஸ் ஹாவிலண்ட் தெரிவித்தார். கிளிநொச்சியில் உள்ள வன்னி இராணுவத் தலைமையகத்தில் இக்கூட்டம் இடம்பெற்றது.


வடக்குப் பகுதியில் எரிபொருளின் விலையைக் குறைக்க அமைச்சரைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.


"காலை 10 மணிக்கு ஆரம்பமான கூட்டம் 12:30 மணிக்கு முடிவடைந்தது," அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். குறிப்பாக வட மாகாணத்தின் அபிவிருத்தி பற்றி இக்கூட்டத்தில் ஆராயப்பட்டதாக அவர் தெரிவித்தார்.


பிரதமர் தி.மு.ஜயரட்ன உட்பட அமைச்சரவை அமைச்சர்கள் அனைவரும் உலங்குவானூர்தி மூலம் கிளிநொச்சிக்கு அழைத்துவரப்பட்டதுடன் அங்கிருந்து சொகுசு தொடருந்துகள் மூலம் இரணைமடுவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.


அமைச்சரவைக் கூட்டத்தை அடுத்து வடமாகாண அரச அதிகாரிகள் பங்கு பற்றும் விசேட கூட்டமொன்றும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையதிகாரிகளுக்கான கூட்டமும் நடைபெற்றது.


வட இலங்கையில் நிரந்தர இராணுவ முகாம்கள் இருக்கும் என இந்தக் கூட்டத்தில் அரசு உறுதி செய்தது.


இலங்கை அரசாங்கம் இடம் பெயர்ந்த வடக்கு பகுதி மக்களை மீள்குடியமர்த்தும் நடவடிக்கைகளை நிகரற்ற வேகத்தில் செய்தது, அரச அதிகாரிகள் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரங்களை கட்டியெழுப்பும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என அரசு அதிகாரிகள் மத்தியில் உரையாற்றும் போது ராஜபக்ச தெரிவித்துள்ளார்.


தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடபகுதி தற்போது இயல்பு நிலைக்கு திரும்பத் தொடங்கியுள்ளது என்று அதிகாரிகள் கூறினாலும், அங்கு நிரந்தர இராணுவ முகாம்கள் இருக்கும் என்கிற செய்தி அவர்களை கவலையடைச் செய்துள்ளது என்றும் செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.


பெரும்பாலும் சிங்கள மக்களைக் கொண்ட இராணுவத்தின் முகாம்கள் வடபகுதியில் நிரந்தரமாக அமையும் போது அவர்களுக்கான புதிய வீடுகளும் அமைக்கப்படும் என்றும் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மூலம்

தொகு