இலங்கையில் 36 குளங்கள் பெருக்கெடுப்பு

This is the stable version, checked on 16 சனவரி 2011. Template changes await review.

ஞாயிறு, சனவரி 9, 2011

இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் வெள்ளம் காரணமாக சுமார் 6 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை அனர்த்த முகாமைத்துவ அமைச்சு அறிவித்துள்ளது. மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தில் 95,376 குடும்பங்களைச் சேர்ந்த 3,58,366 பேரும் அம்பாறை மாவட்டத்தில் 62,362 குடும்பங்களை சேர்ந்த 2,29,548 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையப் பிரதிப் பணிப்பாளர் கூறினார்.


வெள்ளம் காரணமாக 1,57,738 குடும்பங்களைச் சேர்ந்த 5,88,014 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தினால் இது வரை 669 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதோடு 2631 வீடுகள் பாதியளவு சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட மக்கள் 18 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மட்டக்களப்பில் 3558 பேரும் அம்பாறையில் 1127 பேரும் முகாம்களில் தங்கியுள்ளனர். இதேவேளை மழையுடன் கூடிய காலநிலை இன்னும் சில தினங்கள் தொடரும் என காலநிலை அவதான நிலையம் தெரிவித்தது.


இதேவேளை தொடர் மழை காரணமாக 59 பிரதான குளங்களில் 36 குளங்கள் பெருக்கெடுத்துள்ளதாக நீர்வள முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் கூறினார். அநுராதபுரத்தில் 7 குளங்கள் பெருக்கெடுத்துள்ளதோடு பதவிய மற்றும் ராஜாங்கனை குளங்களின் தலா இரு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பில் 4 குளங்கள் பெருக்கெடுத்துள்ளன. உருகாமம் குளத்தின் இரு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. ஹம்பாந்தோட்டையில் 8 குளங்களும் குருநாகலில் 5 குளங்களும் திருகோணமலையில் 2 குளங்களும் மன்னாரில் கட்டுக்கரை குளமும் பெருக்கெடுத்துள்ளதாக அவர் கூறினார்.வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ அமைச்சு கூறியது.


மூலம்