இலங்கையில் வெள்ளத்தால் மீட்கப்பட்ட கர்ப்பிணிப் பெண் உலங்கு வானூர்தியினுள் பிரசவம்

சனி, பெப்பிரவரி 5, 2011

இலங்கையில் அடைமழை தொடர்ச்சியாகப் பெய்து வருவதால் கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள் நீரில் மூழ்கி வெள்ளக் காடாகக் காட்சியளிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்ட பெண்ணொருவர் உலங்கு வானூர்தியினுள் குழந்தையைப் பிரசவித்துள்ளார். நேற்றுக்காலை பெல் – 212 உலங்கு வானூர்தியிலேயே பிரசவம் நிகழ்ந்துள்ளது. இதனையடுத்து தாயையும் குழந்தையையும் அனுராதபுரம் மருத்துவமனையில் விமானப் படையினர் அனுமதித்தனர்.


வெள்ளம் மற்றும் மண்சரிவுகளினால் கிழக்கு, வட மத்திய மாகாணங்கள் அடங்களாக நாட்டிலுள்ள 13 மாவட்டங்களில் 2 லட்சத்து 62 ஆயிரத்து 553 குடும்பங்களைச் சேர்ந்த 6 இலட்சத்து 42 ஆயிரத்து 165 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் பிரதீப் கொடுப்பிலி தெரிவித்தார்.


வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்ளவென கடற்படையின் 24 உயிர் பாதுகாப்புப் குழுக்களை ஈடுபடுத்தியுள்ளதாக கடற்படை பேச்சாளர் கமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார். அனுராதபுரம், மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய பகுதிகளுக்கு இந்தக் குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதோடு, மேலும் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். விமானப் படை உலங்கு வானூர்திகளும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.


பொலன்னறுவை பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்ட பிரதேசங்களில் கர்ப்பிணிப் பெண்களையும் நோயாளர்களையும் உலங்கு வானூர்தியில் விமானப் படையினர் மீட்டெடுத்துள்ளனர். கடற்படை படகுகள் செல்ல முடியாத பகுதிகளில் விமானப் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். விமானப் படையினரின் பெல் – 212 2 உலங்கு வானூர்திகளும், எம். ஐ. – 17 இரண்டு உலங்கு வானூர்திகளும், மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக விமானப் படையின் பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக நாணாயக்கார தெரிவித்தார்.


இதேநேரம் மலையகத்தின் பல பிரதேசங்களில் மண்சரிவுகளும் ஏற்பட்டிருப்பதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் மாவட்ட மட்ட பூகற்பவியலாளர்கள் குறிப்பிட்டனர். தற்போதைய மப்பும், மந்தாரத்துடன் கூடிய மழைக் காலநிலை இன்று வரை நீடிக்கும் என்று வானிலை அவதான நிலையத்தின் கடமை நேர வானிலையாளர்களுக்கான பொறுப்பாளர் ஜயசிங்க ஆராய்ச்சி கூறினார்.

மூலம் தொகு