இலங்கையில் மீண்டும் அடைமழை
செவ்வாய், பெப்பிரவரி 8, 2011
- 9 சூலை 2016: கிழக்கிலங்கை மாகாணசபைத் தேர்தல்கள் 2008
- 4 சூன் 2016: ஈழத் தமிழருக்கான நினைவேந்தல் சென்னை மெரீனா கடற்கரையில் நடந்தது
- 9 ஏப்பிரல் 2015: திருக்கோவில் விசேட அதிரடிப்படை முகாம் முற்றாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது
- 9 ஏப்பிரல் 2015: துன்புறுத்தியே வாக்குமூலம் பெறப்பட்டதாக யசீகரன் நீதிமன்றத்தில் தெரிவிப்பு
- 9 ஏப்பிரல் 2015: திசைநாயகத்திற்கு ஆதரவாக லண்டனில் பன்னாட்டு மன்னிப்பு அவை கவனயீர்ப்பு போராட்டம்
இலங்கையில் கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் தொடர்ச்சியாகப் பெய்துவந்த கனத்த மழை நேற்று முன்தினம் முதல் ஓய்ந்திருந்த போதிலும் நேற்று பகல் முழுவதும் வானம் இருண்டுபோய் எங்கும் இருள்மயமாகக் காணப்பட்டது. அதேநேரம், மத்திய மலையகப் பகுதிகளில் கடும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதளவு பாதிக்கப்பட்டிருந்தது. இப்பகுதிகளில் பகல் நேரத்தில் பயணித்த வாகனங்கள் மின் விளக்குகளை இயக்கியபடியே பயணித்தன.
அடைமழை வெள்ளம் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதுடன், தொலைத்தொடர்பு வசதிகளும் அடிக்கடி துண்டிக்கப்படுகின்றன. அத்துடன், அஞ்சல் சேவையும் பல இடங்களில் பாதிப்படைந்துள்ளது. கொழும்பு மத்திய தபால் நிலையத்தில் விநியோகிக்க முடியாத நிலையில் இலட்சக்கணக்கான தபால்களும், பொதிகளும் தேங்கிக் கிடக்கின்றன. நாட்டில் பல பிரதேசங்களில் பாடசாலைகள் இயங்கவில்லை. அலுவலகங்களிலும் குறைவான சேவையாட்களே கடமையில் ஈடுபட்டிருந்தனர். பெரும்பாலான அறுவடை நிலங்கள் முற்றாக அழிந்துபோயுள்ளன. ஆயிரக்கணக்கான கால்நடைகள் இறந்துள்ளன.
‘லானினா’ நிலமை காரணமாகவே அதிகரித்த முகில் கூட்டங்கள் உருவாவதும், கனத்த மழை பெய்வதும் இடம்பெறுவதாக வானிலை அவதான நிலையத்தின் வானிலையாளர் தமயந்தி இந்தி எட்டி ஹேவகே தெரிவித்தார். இலங்கைக்கு அருகில் தென்கிழக்கு கடல் பகுதியில் மீண்டும் தாழமுக்கம் ஏற்பட்டிருப்பதும் தற்போதைய மப்பும், மந்தாரத்துடன் கூடிய கால நிலைக்குக் காரணமாகி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதே நேரம் நாட்டிலுள்ள 59 முக்கிய குளங்களில் 39 குளங்கள் நிரம்பி வழிவதாகவும், 20 குளங்களின் வான் கதவுகள் தொடர்ந்தும் திறந்து வைக்கப்பட்டிருப்பதாகவும் நீர்ப்பாசனத திணைக்களத்தின் நீர் வள முகாமைத்துவப் பிரதிப் பணிப்பாளர் ஜனாகி மீகஸ்தென்ன கூறினார்.
இந்த ஆண்டில் ஏற்பட்ட இரண்டாவது பாரிய வெள்ளம், மண்சரிவு காரணமாக முழுமையாக அழிவுற்றுள்ள வீடுகளின் எண்ணிக்கை 2273 வரை உயர்ந்திருப்பதாகவும் 13 ஆயிரத்து 148 வரையான வீடுகள் பகுதியளவில் சேதமடைந்திருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் பிரதீப் கொடுப்பிலி கூறினார். இதேவேளை வெள்ளம், மண்சரிவு காரணமாக 85 ஆயிரத்து 387 குடும்பங்களைச் சேர்ந்த 3 இலட்சத்து 11 ஆயிரத்து 287 பேர் 744 முகாம்களில் நேற்றும் தங்கி இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். இவ்வெள்ளம், மண்சரிவு காரணமாக 3 இலட்சத்து 26 ஆயிரத்து 230 குடும்பத்தைச் சேர்ந்த 12 லட்சத்து 23 ஆயிரத்து 52 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையின் பல மாகாணங்களில் அடுத்தடுத்து இரண்டாவது தடவையாகவும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், அந்த நாட்டுக்கு அவசர உதவியாக தேவைப்படுகின்ற நிதியாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த தொகையை மீண்டும் மதிப்பீடு செய்து இம்மாத இறுதியில் அறிவிக்கவுள்ளதாக ஐநா அறிவித்துள்ளது. 15 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்து 744 தற்காலிக இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு தங்குமிடம் உணவு குடிநீர் உள்ளிட்ட உடனடி உதவிகளை செய்வதற்கு இந்த அவசர நிதி தேவைப்படுவதாக ஐநாவின் கொழும்பு தலைமையகம் விடு்த்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மூலம்
தொகு- இலங்கை வெள்ள நெருக்கடி- ஐநா அறிக்கை , பிபிசி, பெப்ரவரி 8, 2011
- ஜனாதிபதியின் பணிப்பில் ரூ.50கோடி அவசர ஒதுக்கீடு, தினகரன் பெப்ரவரி 8, 2011