இலங்கையில் மர்ம மனிதர்கள் நடமாட்டமும், மக்கள் பீதியும்
வியாழன், ஆகத்து 11, 2011
- 9 சூலை 2016: கிழக்கிலங்கை மாகாணசபைத் தேர்தல்கள் 2008
- 4 சூன் 2016: ஈழத் தமிழருக்கான நினைவேந்தல் சென்னை மெரீனா கடற்கரையில் நடந்தது
- 9 ஏப்பிரல் 2015: திருக்கோவில் விசேட அதிரடிப்படை முகாம் முற்றாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது
- 9 ஏப்பிரல் 2015: துன்புறுத்தியே வாக்குமூலம் பெறப்பட்டதாக யசீகரன் நீதிமன்றத்தில் தெரிவிப்பு
- 9 ஏப்பிரல் 2015: திசைநாயகத்திற்கு ஆதரவாக லண்டனில் பன்னாட்டு மன்னிப்பு அவை கவனயீர்ப்பு போராட்டம்
இலங்கையின் பல இடங்களிலும் உடம்பில் கிரீஸ் களிம்பு பூசிய மர்ம மனிதர்களும், விதம்விதமான ஆடைக்கவசங்களை அணிந்த மர்ம மனிதர்களும் பெண்களை குறிவைத்து ஆங்காங்கே நடமாடுவதாக கிழக்கு மாகாணம், மலையகம் மற்றும் நாட்டின் தெற்குப் பகுதிகளில் செய்திகள் பரவி வருகின்றன. இதனால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
இன்று மலையக நகரான அப்புத்தளை தொட்டலாகலத் தோட்டத்திற்குச் சென்ற இரு நபர்களை மர்ம நபர்கள் எனச் சந்தேகித்த தோட்டத் தொழிலாளர்கள் அந்நபர்களை வெட்டி, தாக்கி கொன்றுள்ளதாக தமிழ்மிரர் செய்தி தெரிவித்துள்ளது
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஓட்டமாவடி எனுமிடத்தில் காவல்துறையினருக்கும் பொது மக்களுக்கும் இடையே ஏற்பட்ட முறுகல்நிலை மோதலாக மாறியதை அடுத்து அங்கு நேற்று புதன்கிழமை பெரும் பதற்றநிலை ஏற்பட்டது. நேற்று மர்மமனிதன் எனப்படும் நபரொருவர் ஓட்டமாவடி (நாவலடி) கிராமத்தில் 31வயதுடைய பெண்ணின் கையைப்பிடித்து இழுத்ததைத்தொடர்ந்து மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த சந்தேகநபரை தம்மிடம் மீண்டும் ஒப்படைக்குமாறு கோரியே மக்களில் சிலர் காவல்துறையினருடன் கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர். குறித்த சந்தேக நபரை காவல்துறையினர் விடுவித்துவிட்டதாக பரவிய வதந்தியை அடுத்து, அங்கு கூடிய பொதுமக்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு காவல்துறையினரையும் கற்களால் தாக்கியுள்ளனர்.
இதன்போது, ஏற்பட்ட கைகலப்பு மற்றும் நிலைமையை கட்டுப்படுத்த காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து பொதுமக்கள் தரப்பில் இருவரும்காவல்துறையினர் தரப்பில் ஒருவரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் காவல்துறை வாகனங்களையும் மக்கள் தாக்கி சேதப்படுத்தியுள்ளனர். இதன்போது 25 பொது மக்கள் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று நண்பகல் வேளையில் வீதிகளில் டயர்கள் எரிக்கப்பட்டு, கடைத் தெருக்கள் மூடப்பட்டு, வாகன போக்குவரத்துமின்றி பிரதேசத்தின் நிலமை பெரும் பதற்றமாக இருந்ததுடன் பிரதேசத்தில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு மாலை அளவில் நிலமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்ததாக வாழைச்சேனை காவல்துறையினர் தெரிவித்தனர்.
மலையகத்தில் மஸ்கெலியா, சாமிமலை, நோர்வூட், பொகவந்தலாவ, டிக்கோயா பகுதிகளிலுள்ள தோட்டங்களில் தொழிலாளர்கள் காலை நேரத்தில் வேலைக்குச் சென்றிருந்த போது திடீரென மர்ம மனிதர்கள் வந்துள்ளதாக வதந்திகள் பரவியதால் ஆண், பெண் தொழிலாளர்கள் பதறியடித்துக்கொண்டு வேலைத்தலத்திலிருந்து திரும்பி வந்துவிட்டார்கள். மஸ்கெலியா பகுதியில் மறே, லக்சபான, மவுசாக்கொல்லை, பிரவுண்லோ, பிரன்ஸ்விக், ஸ்ரெஸ்பி தோட்டங்களிலும் நோர்வூட் பகுதிகளிலுள்ள தோட்டங்களிலும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டிருந்தது.
மூலம்
தொகு- ஓட்டமாவடியில் பொலிஸ் - மக்கள் மோதல், பிபிசி, ஆகத்து 11, 2011
- மர்ம மனிதர்களின் பீதியினால் மலையகத்தில் தொடர்ந்தும் பதற்றம், வீரகேசரி, ஆகத்து 11, 2011
- மர்ம மனிதர்களால் எழுந்துள்ள பதற்றத்தை போக்க விசேட பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் அமைச்சர் ஆறுமுகன் தெரிவிப்பு, தினக்குரல், ஆகத்து 11, 2011
- பெண்ணைச் சீண்டிய கிறீஸ்மனிதன் மக்களால் வளைத்துப் பிடிப்பு, தினகரன், ஆகத்து 11, 2011
- மர்ம மனிதன் குறித்த விசாரணைகள் நம்பகத் தன்மையாக இடம்பெற்றால் மாத்திரமே மக்களின் பீதியைப் போக்க முடியும் திகாம்பரம் எம்.பி., தினக்குரல், ஆகத்து 11, 2011
- கிரீஸ் பூதம் என்ற சந்தேகத்தில் இருவர் கொலை; ஹப்புத்தளையில் சம்பவம், தமிழ்மிரர், ஆகத்து 11, 2011