இலங்கையில் தமிழ் அரசியல் கைதிகள் சாகும்வரை உண்ணாவிரதம்

There are no reviewed versions of this page, so it may not have been checked for adherence to standards.

ஞாயிறு, சனவரி 10, 2010


விசாரணை செய் அல்லது விடுதலை செய் என்ற கோரிக்கையை முன் வைத்து இலங்கையின் பல்வேறு சிறைச் சாலைகளிலும் அடைத்து வைக்கப்பட்டுள்ள 577 தமிழ் அரசியல் கைதிகள் சாகும் வரை உண்ணாவிரதத்தில் குதித்துள்ளனர். இவர்களில் சிலர் மயக்கமடைந்த நிலையில் நேற்று சனிக்கிழமை ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர்.


கொழும்பு புதிய மகசீன் சிறைச்சாலைக் கைதிகள் இருவரும் யாழ்ப்பாணச் சிறைச்சாலைக் கைதிகள் இருவருமே உடல்நிலை மோசமடைந்த நிலையில் நேற்று ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் 380 பேரும் புதிய மகசீன் சிறைசாலையில் 98 பேரும், அநுராதபுரம் சிறைச்சாலையில் 28 பேரும், யாழ்ப்பாணத்தில் 24 பேரும், மட்டக்களப்பில் 17 பேரும், வெலிக்கடையில், கண்டியில் 24 பேரும், 6 பேருமென 577 பேர் இந்த சாகும் வரை உண்ணாவிரதப்போராட்டத்தில் குதித்துள்ளனர்.


இந்த நிலையில் நேற்று முற்பகல் புதிய மகசீன் சிறைச்சாலைக்குச் சென்ற சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஆர்.டி.சில்வா கைதிகளின் உண்ணாவிரதத்தைக் கைவிடச் செய்ய பலத்த முயற்சிகளை மேற்கொண்ட போதும் அது வெற்றியளிக்கவில்லை.


மிக நீண்ட நேரம் தமிழ்க் கைதிகளுடன் உரையாடிய அவர், சட்டமா அதிபருடன் ஆலோசித்து விசாரணை அல்லது விடுதலைக்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். எனினும் ஜனவரி இறுதியில் நடைபெறும் அரசுத் தலைவர் தேர்தலுக்கு முன்னர் உரிய பதில் கிடைக்காவிட்டால் தங்கள் போராட்டம் தொடருமெனத் தமிழ்க் கைதிகள் தெரிவித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


ஆனால், இவர்கள் உறுதியளித்து பத்து நாட்களாகியும் எதுவித நடவடிக்கையும் இதுவரையும் எடுக்கப்படாததால் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் தாங்கள் குதித்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். இதற்கு முன்னரும் பல தடவைகள் தாம் இக்கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்தபோதும் நடவடிக்கை எடுக்கப்படுமென நீதியமைச்சும் அதிகாரிகளும் கூறியதால் தாங்கள் போராட்டங்களைக் கைவிட்டதாகவும் எனினும் எதுவுமே நடைபெறவில்லையெனவும் தெரிவித்தனர். நேற்று ஆரம்பித்த இந்த உண்ணாவிதரப் போராட்டத்தை நிறுத்தப் போவதில்லை எனவும் இவர்களின் உறுதி மொழிகளைக் கேட்டு இனியும் தாங்கள் ஏமாறப்போவதில்லையெனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

மூலம்

தொகு