இலங்கையில் சீதைக்குக் கோவில், இந்தியா அறிவிப்பு

ஞாயிறு, சூன் 2, 2013

இலங்கையின் மலையகத்தில் இராமாயணப் பாத்திரமான சீதைக்குக் கோயில் ஒன்று கட்டுவதற்கு இலங்கை அரசிடம் இருந்தும், இந்திய அரசிடம் இருந்தும் ஒப்புதல் கிடைத்துள்ளதாக இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சௌகான் நேற்று அறிவித்துள்ளார்.


சீதையும் மகன் லவனும்

நுவரெலியா மாவட்டத்தில் திவுரும்பொலை என்ற இடத்தில் இக்கோவில் கட்டப்படவுள்ளது. இந்த இடத்திலேயே சீதை "அக்கினிப் பரீட்சை" நடத்தியதாக நம்பப்படுகிறது.


“இலங்கை அரசிடம் இருந்து எமக்கு அனுமதி கிடைத்துள்ளது, அத்துடன் இந்திய அரசும் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது,” என சௌகான் தெரிவித்தார். மத்தியப் பிரதேசத்தில் இடம்பெற்ற ஒரு நிகழ்வில் அவர் உரையாற்றுகையில், "கோவில் சுவாமி தயானந்தா அறக்கட்டளை மூலம் நிறுவப்படவுள்ளது," எனக் கூறினார்.


2012 செப்டம்பரில் இலங்கை அரசுத்தலைவர் மகிந்த ராசபக்ச சாஞ்சிக்குப் பயணம் மேற்கொண்ட போது இதற்கான கோரிக்கை விடுக்கப்பட்டது. இத்திட்டத்திற்கு ஒரு கோடி ரூபா ஒதுக்கப்படும் என சௌகான் தெரிவித்தார்.


சீதைக்காக இலங்கையில் அமைக்கப்பட்ட இரண்டாவது கோயிலாக இது விளங்கும். சீதா எலிய என்ற இடத்தில் சீதைக்கு ஒரு கோவில் ஏற்கனவே உள்ளது.


இராமாயணத்துடன் தொடர்புள்ள 50 இடங்கள் இதுவரையில் இலங்கையில் இனங்காணப்பட்டுள்ளன. 2007 ஆம் ஆண்டில் இலங்கை சுற்றுலா அபிவிருத்தித் துறை ஆணையம் இதற்கான திட்டத்தை முன்னெடுத்திருந்தது.


ஆனாலும், இலங்கையின் அரச ஆசியர் சமூகம் (Royal Asiatic Society of Sri Lanka) இத்திட்டத்தை எதிர்த்துக் குரல் கொடுத்துள்ளது. இந்தப் பாரம்பரியக் களங்களை இனங்கண்ட நிபுணர்கள் இலங்கையின் பல தொல்லியல் ஆதாரங்களை அழித்து விட்டதாகக் குற்றஞ்சாட்டியுள்ளது. இராமாயணத்தை அடையாளம் காட்டும் இந்தத் திட்டம் குறைந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கவே மேற்கொள்ளப்படுகிறது என அவர்கள் கூறுகின்றனர்.


மூலம் தொகு