இலங்கையில் காவல்நிலையப் பொறுப்பதிகாரி உட்பட நால்வருக்கு மரணதண்டனை

This is the stable version, checked on 22 சூலை 2018. Template changes await review.

சனி, ஆகத்து 27, 2011

இலங்கையில் 2009 இல் இடம்பெற்ற அங்குலானை இரட்டைகொலை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என குற்றம் சுமத்தப்பட்டிருந்த அங்குலானை காவல் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரி உள்ளிட்ட நான்கு சந்தேகநபர்களுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும் நான்கு குற்றவாளிகளுக்கும் தலா 40 வருட சிறைத் தண்டனையும் தலா ஒரு இலட்சம் ரூபா தண்டமும் விதிக்கப்பட்டது.


சந்தேகநபர்களுக்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்கள் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால் அங்குலானை காவல் நிலைய முன்னாள் பொலிஸ் பொறுப்பதிகாரி நியூட்டன், காவல்துறை கான்ஸ்டபிள்களான ஜீ. ஏ. குமாரசிறி, நிஹால் ஜயரட்ன, சிவில் பாதுகாப்பு படையின் ஜனத்பிரிய சேனாரத்ன ஆகிய நால்வருக்குமே இவ்வாறு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.


2009ம் ஆண்டு ஆகத்து மாதம் 12ம் திகதி தினேஸ் தரங்க பெனாண்டோ, தனுஸ்க அப்பொன்ஸ் ஆகிய இரு இளைஞர்களையும் கடத்திச் சென்று கொலை செய்ததாக சந்தேகநபர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இரு இளைஞர்கள் காணாமல் போனதால் அங்குலான பகுதியில் பெரும் குழப்பநிலை ஏற்பட்டது. மக்கள் காவல்துறையினருக்கு எதிராக கிளர்த்தெழுந்ததோடு காவல்நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தினர். இதன் பின்னரே கைதான இரு இளைஞர்களும் கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப் பட்டது. இவர்கள் மீதான குற்றச்சாட்டு ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளதை அடுத்து நீதிமன்றத்தால் மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தீபாலி விஜேசுந்தர, ஏ. பீ. வராவெள மற்றும் குமுதினி விக்ரமசிங்க ஆகிய நீதியரசர்கள் ஆகத்து 25ம் திகதி இத்தீர்ப்பினை வழங்கினர்.


மூலம்

தொகு