இலங்கையில் கடத்தப்பட்ட பிரேம்குமார் விடுவிக்கப்பட்டு ஆத்திரேலியாவுக்கு அனுப்பப்பட்டார்
செவ்வாய், ஏப்பிரல் 10, 2012
- 9 சூலை 2016: கிழக்கிலங்கை மாகாணசபைத் தேர்தல்கள் 2008
- 4 சூன் 2016: ஈழத் தமிழருக்கான நினைவேந்தல் சென்னை மெரீனா கடற்கரையில் நடந்தது
- 9 ஏப்பிரல் 2015: திருக்கோவில் விசேட அதிரடிப்படை முகாம் முற்றாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது
- 9 ஏப்பிரல் 2015: துன்புறுத்தியே வாக்குமூலம் பெறப்பட்டதாக யசீகரன் நீதிமன்றத்தில் தெரிவிப்பு
- 9 ஏப்பிரல் 2015: திசைநாயகத்திற்கு ஆதரவாக லண்டனில் பன்னாட்டு மன்னிப்பு அவை கவனயீர்ப்பு போராட்டம்
இலங்கையில் கடந்த சனிக்கிழமை அதிகாலையில் இனந்தெரியாதோரால் கடத்தப்பட்ட மக்கள் போராட்ட அமைப்பின் தலைவர்கள் பிரேம்குமார் குணரத்தினமும், திமுத்து ஆட்டிகலையும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஆத்திரேலியக் குடியுரிமை பெற்ற பிரேம்குமாரைக் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கமாறு இலங்கை அரசுக்கு ஆத்திரேலியா கடும் அழுத்தங்களைக் கொடுத்திருந்தது. இந்த நிலையிலேயே நேற்றிரவு குணரத்தினம் கொழும்புக்கு அருகேயுள்ள காவல் நிலையம் ஒன்றுக்கு அருகில் இறக்கிவிடப்பட்டார். அவர் பின்னர் காவல்நிலையத்துக்குச் சென்று தன்னை வெளிப்படுத்தியதாக ஆத்திரேலியாவுக்கான இலங்கை தூதுவர் அட்மிரல் திசார சமரசிங்க உறுதிப்படுத்தியுள்ளார்.
இவரை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்றும்படி பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் இன்றுகாலை அவசர அவசரமாக நாடு கடத்தப்பட்டார். இலங்கைக்கான ஆத்திரேலியத் தூதர் பிரேம்குமாரை கொழும்பு விமானநிலையத்தில் வைத்து வழியனுப்பி வைத்தார்.
இதற்கிடையில், முன்னிலை சோசலிசக் கட்சியின் தலைவர் பிரேம்குமாருடன் கடத்தப்பட்ட, அந்தக் கட்சியின் பெண்கள் பிரிவு தலைவி திமுத்து ஆட்டிகல இன்று காலை 10 மணியளவில் கடத்தல்காரர்களால் விடுவிக்கப்பட்டுள்ளார். கட்சியின் தலைமையகம் அமைந்துள்ள மடவெல பகுதியில் வைத்து கடத்தல்காரர்கள் இவரை விடுவித்துள்ளனர்.
கட்சித் தலைமையகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார் திமுத்து ஆட்டிகல. "வெள்ளை வான் ஒன்றில் வந்த ஆறு பேர் எனது கண்களைக் கட்டி கடத்திச் சென்றனர். அவர்கள் என்னை ஒரு அறைக்குள் அடைத்து வைத்திருந்தனர். அதிகாலை 5 மணியளவில் கடத்தல்காரர்கள் குணரத்தினத்தையும் என்னையும் விசாரணைக்கு உட்படுத்தினர். நீங்கள் இல்லையென்றால், தலைவர் இல்லாமல் உங்களின் கட்சியின் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டு விடுமா என்று அவர்கள் கேள்வி எழுப்பினர். அடுத்த இரவு நான் வேறொரு இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டு இன்று காலை வரை அங்கேயே தடுத்து வைக்கப்பட்டிருந்தேன். தம்மை அடையாளம் காண முனையவோ, வாகன இலக்கத்தைக் குறிப்பெடுக்கவோ கூடாது என்று கடத்தல்காரர்கள் என்னிடம் கூறினர். இதில் அரசாங்கம் சம்பந்தப்படவில்லை என்றும் கடத்தல்காரர்கள் என்னிடம் கூறியிருந்தனர்," என்று திமுத்து ஆட்டிக்கல கூறினார்.
மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) இலிருந்து கடந்த ஆண்டு பிரேம்குமார் குணரத்தினம் தலைமையில் வெளியேறிய மாற்றுக் குழுவினர் "மக்கள் போராட்ட இயக்கம்" என்ற பெயரில் அமைப்பொன்றை ஆரம்பித்திருந்தனர். அத்துடன் "முன்னிலை சோசலிசக் கட்சி" என்ற பெயரில் புதிய கட்சியொன்றையும் உருவாக்கியிருந்தனர். நேற்று திங்கட்கிழமை கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இக்கட்சியின் முதலாவது மாநாடு நடைபெற்றது.
தொடர்புள்ள செய்திகள்
தொகுமூலம்
தொகு- குமார் குணரட்ணம் அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பப்படுகிறார், தமிழ்மிரர், ஏப்ரல் 10, 2012
- Missing Dimuthu Attygala returns, டெய்லிமிரர், ஏப்ரல் 10, 2012
- Gota slams Australia, டெய்லிமிரர், ஏப்ரல் 10, 2012