இலங்கையில் எரிபொருள் விலையுயர்வைக் கண்டித்து மீனவர்கள் ஆர்ப்பாட்டம், ஒருவர் உயிரிழப்பு

புதன், பெப்பிரவரி 15, 2012

இலங்கையில் எரிபொருட்களின் விலையுயர்வைக் கண்டித்து சிலாபம் நகரில் இன்று மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதை அடுத்து, காவல்துறையினருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்குமிடையே ஏற்பட்ட மோதலின் போது இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தையான அந்தோனி என்பவர் கொல்லப்பட்டார். மேலும் பலர் காயமடைந்த நிலையில் சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.


எரிபொருள் விலையேற்றத்தையடுத்து, மூன்று நாட்களாக புத்தளம், சிலாபம், மன்னார் பகுதி மீனவர்கள் கடற்தொழிலுக்குச் செல்லாமல் பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து கறுப்புக் கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தென்னிலங்கை மீனவர்களுடன் இணைந்து அகில இலங்கை மட்டத்தில் மீனவர்களின் போராட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். ஏற்கனவே போரி்னால் பாதிக்கப்பட்டிருந்து, படிப்படியாக மீன்பிடித் தொழிலை முன்னெடுக்க முயற்சிக்கின்ற தமக்கு திடீரென 35 ரூபாயால் அதிகரிக்கப்பட்ட மண்ணெண்ணெய் விலையால் பலத்த அடி விழுந்துள்ளதாக வடபகுதி மீனவர்கள் கூறுகின்றனர்.


இலங்கையில் சனிக்கிழமை நள்ளிரவு முதல் பெற்றொல் விலை 12 ரூபாயாலும் டீசல் விலை 31 ரூபாயாலும் மண்ணெண்ணெய் விலை 35 ரூபாயாலும் அதிகரிக்கப்பட்டன. இப்பகுதிகளில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுடன், தொடர் பதற்றநிலை காணப்பட்டு வந்த நிலையில் இன்றைய ஆர்ப்பாட்டத்தின்போது, இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


சிலாபத்தில் இடம்பெற்ற சம்பவங்களை விசாரிக்க சிறப்புப் புலனாய்வு அதிகாரிகள் அங்கு அனுப்பட்டுள்ளனர் என காவல்துறை மா அதிபர் என். கே. இலங்க்கக்கோன் தெரிவித்தார். காவல்துறையினர் எவரும் இச்சம்பவத்தில் காயமடையவில்லை. அதே நேரத்தில் சிலாபம் நகர் பகுதிக்கு நாளை காலை 6 மணி வரை காவல்துறை ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளனர்.


மூலம் தொகு