இலங்கையில் உள்ளூராட்சி மன்றங்கள் கலைப்பு

வியாழன், சனவரி 6, 2011

இலங்கையில் சகல உள்ளூராட்சி மன்றங்களும் இன்று நள்ளிரவு முதல் கலைக்கப்பட உள்ளதாக மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் நிகால் ஜயதிலக கூறியுள்ளார். இன்று இது குறித்த சிறப்பு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவுள்ளது.


உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் மார்ச் மாதத்தில் நடைபெறவுள்ளதோடு இதற்கான திகதியை மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சர் அறிவிக்க உள்ளார். அதன் பின்னர் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் திணைக்களம் முன்னெடுக்கும் என பிரதித் தேர்தல் ஆணையாளர் சுமணசிறி கூறினார்.


அதே நேரம் உலகக் துடுப்பாட்டக் கிண்ணப் போட்டிகளின் சில ஆட்டங்கள் பெப்ரவரி, மார்ச் மாதங்களில் இலங்கையில் நடைபெற உள்ளதால், அப்போட்டிகள் நடைபெறும் கொழும்பு, கண்டி மற்றும் அம்பாந்தோட்டைப் பிரதேசங்களில் உள்ள உள்ளூராட்சி சபைகள் கலைக்கப்படாது எனவும் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சு தெரிவித்தது. இங்குள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் வேறொரு நாளில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை, அண்மையில் தேர்தல் நடைபெற்ற யாழ். மாநகர சபை மற்றும் வவுனியா நகர சபை என்பனவும் கலைக்கப்படாது என அமைச்சு தெரிவித்துள்ளது.


மூலம்தொகு