இலங்கையில் அடைமழை, குறுஞ் சூறாவளி, 9 பேருக்கு மேல் உயிரிழப்பு

சனி, நவம்பர் 26, 2011

இலங்கை முழுவதும் நேற்றுப் பெய்த அடைமழை மற்றும் குறுஞ் சூறாவளியினால் வடக்கு, கிழக்கு உட்பட பல பிரதேசங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியதுடன், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதாகப் பாதிக்கப்பட்டுள்ளது. காலநிலை சீர்கேட்டினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்வடைந்துள்ளதென அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று தெரிவித்துள்ளது.


இதேவேளை, கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 30 மீனவர்கள் இன்றும் கரை திரும்பவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சூறாவளி, வெள்ளம், மண்சரிவால் 6153 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.


காலநிலைச் சீர்கேட்டினால் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலேயே உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன. மாத்தறையில் குறுஞ் சூறாவளியினால் மரங்கள் முறிந்து வீழ்ந்ததில் 3 பேரும் கடலுக்குச் சென்றவர்கள் நால்வருமே உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இம்மழை, கடுங்காற்று காரணமாக காலி மாவட்டத்தில் நூறு வீடுகள் சேதமடைந்திருப்பதாக காலி மாவட்ட மேலதிக செயலாளர் குறிப்பிட்டார்.


இதேநேரம் வன்னிப் பகுதியில் இரணைமடு குளத்தின் பத்து வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன. தொடர் மழை காரணமாக கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு காரணமாக நேற்றும் 100 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இவர்கள் தமது உறவினர்களின் வீடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். இம்மாவட்டத்தில் 50,000 ஏக்கர் நெற்செய்கை பிரதேசம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. வாகனேரி வெல்லாவெளி கொக்கட்டிச்சோலை, வவுணதீவு, செங்கலடி, கிரான், வாகரை ஆகிய பகுதிகளிலேயே நெற் செய்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. களுவாஞ்சிக்குடி, ஆரையம்பதி, காத்தான்குடி, ஏறாவூர், கிரான், வாழைச்சேனை, ஓட்டமாவடி, வெல்லாவெளி, பட்டிப்பளை, வவுணதீவு போன்ற பிரதேசங்களின் தாழ் நிலங்கள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளன.


மூலம் தொகு