இலங்கையின் மகர சிறையில் தமிழ்க் கைதி அடித்துக் கொல்லப்பட்டார்

This is the stable version, checked on 23 சூலை 2018. Template changes await review.

வியாழன், சூலை 5, 2012

இலங்கையின் வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையிலிருந்து தெற்கே மகர சிறைக்கு மாற்றப்பட்ட நிலையில் நிமலரூபன் என்ற அரசியல் கைதி சிறையில் வைத்து சித்திரவதை செய்யப்பட்ட நிலையில் நேற்றுக் காலை இறந்துள்ளார் என பிபிசி அறிவித்துள்ளது.


வவுனியா சிறைச்சாலையில் இடம்பெற்ற சில சம்பவங்களை அடுத்து நிமலரூபன் அநுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார். அதன் பின்னர் இவர் அங்கிருந்து மேற்கு மாகாணத்தில் உள்ள மகர சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார். 29 வயதான இந்த இளைஞர் வவுனியா நெளுக்குளத்தைச் சேர்ந்தவர். இவர் எவ்வாறு இறந்தார் எனத் தெரியாது என மகர சிறைச்சாலை அதிகாரி தெரிவித்தார். மகர சிறையில் இருந்து ராகமை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட பின்னரே அவர் இறந்துள்ளதாக அவர் தெரிவித்திருந்தாலும், சிறைச்சாலையிலேயே அவர் இறந்து விட்டதாகவும் அதன் பின்னரே மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளார் என சக கைதிகள் தெரிவித்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் பிபிசிக்குத் தெரிவித்துள்ளார்.


சென்ற வாரம் வவுனியாவில் சிறைக்காவலர்கள் மூவரைப் பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்துப் போராட்டம் நடத்தியதாகக் கூறப்படுகின்ற தமிழ் அரசியல் கைதிகள் உடனடியாக அநுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டிருந்தனர். இவர்களில் மகர சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட 22 பேரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றக் குழுவினர் மகர சிறைச்சாலையில் நேற்றுப் புதன்கிழமை பார்வையிட்டனர்.


மகர சிறைக்கைதிகளில் நான்கு பேர் ராகமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மஹர சிறைசாலைக்கும் ராகம மருத்துவமனைக்கும் காயமடைந்த நிலையில் கொண்டுவரப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளை பார்வை இடுவதற்கு சட்டத்தரணிகள் முயற்சி செய்ததனர். ஆனால், இந்த காயமடைந்த கைதிகளை பார்வையிடுவதற்கு சட்டத்தரணிகளுக்கு உள்ள உரிமை மறுக்கப்பட்டுள்ளது என தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் மக்கள் கண்காணிப்பு தெரிவித்தது.


நிமலரூபனின் உயிருக்கு மகிந்த ராஜபக்ச அரசாங்கமே முழுப் பொறுப்புக் கூற வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் ஜயலத் ஜயவர்தன தெரிவித்துள்ளார்.


வவுனியா சிறைச்சாலை மோதல் சம்பவத்தின் போது காவல்துறையினரால் தாக்கப்பட்ட எந்த கைதியும் இறக்கவில்லை. இருதய நோய்க்கு சிகிச்சைபெற்று வந்த கைதி ஒருவரே நேற்று ராகம ஆஸ்பத்திரியில் இறந்துள்ளதாக சிறைச்சாலை மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் சந்திரசிறி கஜதீர நாடாளுமன்றத்தில் நேற்றுத் தெரிவித்தார்.



மூலம்

தொகு