இலங்கையின் பல பகுதிகளில் பெரு வெள்ளம், 42 பேர் உயிரிழப்பு

This is the stable version, checked on 23 சூலை 2018. Template changes await review.

திங்கள், திசம்பர் 24, 2012

இலங்கையில் வடக்கு, கிழக்கு உட்பட 18 மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகப் பெய்து வந்த பெரும் மழையை அடுத்து இடம்பெற்ற வெள்ளப்பெருக்கும், மறும் மண்சரிவுகளினால் குறைந்தது 42 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 12 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒன்பது பேர் காணாமல் போயுள்ளனர்.


சீரற்ற காலநிலையினால் இலங்கை எங்கனும், 60,784 குடும்பங்களைச் சேர்ந்த 2,22,699 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 10,830 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன என இலங்கை அனர்த்த நிவாரண நிலையம் அறிவித்துள்ளது.


வவுனியா, மன்னார் மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழை காரணமாக ஆறுகள் பல பெருக்கெடுத்துள்ளன. கடும் வெள்ளம் காரணமாக ஏ-9 வீதி நேற்று மூன்று மணி நேரம் மூடப்பட்டிருந்தது. குடிமனைகளுக்குள் வெள்ளம் புகுந்தது. வீட்டை விட்டு வெளியேறியவர்கள் பாடசாலைகள் மற்றும் ஆலயங்களின் தங்கவைக்கப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள முத்தையன்கட்டுக்குளத்தின் இரண்டு வான்கதவுகள் நேற்றுக் காலை திறந்துவிடப்பட்டுள்ளன.


இதேவேளை, திருகோணமலை மாவட்டத்திலுள்ள கந்தளாய்க்குளத்தின் அவசர வான்கதவுகள் பத்தும் திறந்துவிடப்பட்டுள்ளதால் தம்பலகாமம் பிரதேசம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. அத்துடன், திருகோணமலை - கண்டி வீதியிலுள்ள பிரசித்தி பெற்ற பாலம்போட்டாறு பத்தினியம்மன் ஆலயமும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.


அடுத்து வரும் சில தினங்களுக்கு மழை வீழ்ச்சி மேலும் அதிகரிக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.


மூலம்

தொகு