இலங்கையின் தேசியப் பண் சிங்களத்தில் மட்டுமே பாடப்பட வேண்டும் என அமைச்சரவை முடிவு

This is the stable version, checked on 22 சூலை 2018. Template changes await review.

திங்கள், திசம்பர் 13, 2010

சிறீ லங்கா தாயே என்னும் இலங்கையின் தேசியப் பண்ணின் தமிழ் வடிவத்தை இரத்துச் செய்ய இலங்கையின் அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இலங்கையின் தேசியப் பண் சிங்கள மொழியில் மட்டுமே பாடப்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.


தமிழ் வடிவம் குறிப்பாக இலங்கையின் வட, கிழக்கு மாகாணங்களில் பாடப்பட்டு வடுகிறது. சிங்களப் பாடலில் அதே இசையமைப்பிலும் மொழிபெயர்ப்புடனும் தமிழ் வடிவம் இலங்கை விடுதலை அடைந்த காலத்தில் இருந்து பாடப்பட்டு வருகிறது. பண்டிதர் ம. நல்லதம்பி என்பவர் இதனை 1950 ஆம் ஆண்டில் மொழிபெயர்த்தார்.


அரசுத்தலைவர் மகிந்த ராசபக்ச தலைமையில் அமைச்சரவை கூடிய போதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது. இலங்கையைத் தவிர உலகின் எந்த நாட்டிலும் இரு மொழிகளில் தேசியப் பண் பாடப்படுவதில்லை என ராசபக்ச கூறியதாக சண்டே டைம்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது. இலங்கை ஒரு நாடு என்பதை அனைவரும் மனதில் கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார்.


அரசாங்கத்தின் இம்முடிவு இலங்கையின் சிறுபான்மையினத்தை மேலும் தனிமைப்படுத்தவே உதவும் என அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.


இதற்கிடையில், இலங்கையின் தேசியப் பண்ணை சிங்கள மொழியில் மட்டுமே இசைக்க வேண்டுமென அமைச்சரவையில் எவ்வித இறுதித் தீர்மானமும் நிறைவேற்றப்பட வி்ல்லையென இலங்கை அமைச்சர் டக்ளசு தேவானந்தா பிபிசி தமிழோசைக்குத் தெரிவித்தார்.


மூலம்

தொகு