இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் மீது பாலியல் குற்றச்சாட்டு

This is the stable version, checked on 22 சூலை 2018. Template changes await review.

செவ்வாய், நவம்பர் 22, 2011

இலங்கையின் முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக குற்றப்பத்திரிகையொன்று ஐ.தே.க. செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. கட்சி மறுசீரமைப்பு குழுவைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் இந்தக் குற்றப்பத்திரிகையை செயலாளரிடம் கையளித்துள்ளதாகத் தெரிய வருகின்றது.


இதேவேளை, கட்சித் தலைவருக்கு எதிரான முறைப்பாடு கிடைத்திருப்பதாகவும் அதனை ஆலோசனைச் சபைக்கு சமர்ப்பிக்கவுள்ளதாகவும் திஸ்ஸ அத்தநாயக்க கொழும்பு பேஜ் இணையத்தளத்திற்குத் தெரிவித்திருக்கிறார். "கடிதம் தொடர்பாக நான் எதுவும் செய்ய முடியாது. கட்சியின் ஆலோசனைச் சபைக்கு சமர்ப்பிப்பேன். அது தொடர்பாக எவ்வாறு செயற்படுவதென ஆலோசனைச் சபை தீர்மானிக்கும்," என்றும், இந்த இரு அமைப்புக்களினதும் கூட்டம் விரைவில் இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் இல்லையெனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.


மாத்தறை மாவட்ட ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரனவை தன்னினச் சேர்க்கை உறவுக்கு ரணில் விக்கிரமசிங்க முயற்சித்திருந்ததாகவும் அதற்கு அவர் மறுத்த போது புத்திக பத்திரன கட்சி உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்தப்பட்டதாகவும் அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாக 'லக்பிம நியூஸ்' தெரிவித்திருக்கிறது.


அதே நேரம் ஐ.தே.க.வின் தென்மாகாண சபை உறுப்பினர் மைத்திரி குணரட்ணவினால் கடந்த வாரம் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக 20 குற்றச்சாட்டுக்கள் அடங்கிய ஆவணம் கையளிக்கப்பட்டிருந்தது. ஐ.தே.க. பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான மறுசீரமைப்புக்கு ஆதரவான குழுவின் உறுப்பினராக குணரட்ண உள்ளார். பிரதித் தலைவர் கரு ஜயசூரியவிடம் கட்சித் தலைமைப் பொறுப்பை ரணில் கையளிக்க வேண்டுமென மறுசீரமைப்புக்கு ஆதரவான குழுவினர் வலியுறுத்தி வருகின்றனர்.


மூலம்

தொகு