இலங்கையின் 'சண்டே லீடர்' பத்திரிகை ஆசிரியர் பிரெடெரிக்கா ஜான்சு பதவி நீக்கம்

This is the stable version, checked on 23 சூலை 2018. Template changes await review.

சனி, செப்டெம்பர் 22, 2012

இலங்கையின் பிரபலமான ஞாயிறுப் பத்திரிகையான சண்டே லீடரின் ஆசிரியர் பிரெடெரிக்கா ஜான்சு அப்பத்திரிகையின் புதிய நிருவாகியால் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.


சண்டே லீடர் பத்திரிகை இலங்கை அரசை விமரிசித்து வந்துள்ள நிலையில், இதன் நிருவாகம் இப்போது அரசு சார்பானவர்களிடம் கைமாறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. புதிய உரிமையாளர் பத்திரிகையின் அரசியல் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளுமாறு தன்னை வலியுறுத்தி வந்ததாக பிரெடெரிக்கா ஜான்சு பிபிசி செய்தியாளரிடம் தெரிவிக்கிறார். இக்கோரிக்கையை மறுத்தமையே தம்மை பணிநீக்கம் செய்யக் காரணம் என அவர் கூறியுள்ளார்.


சண்டே லீடரின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க மூன்றாண்டுகளுக்கு முன்னர் முகமூடி அணிந்தவர்களினால் படுகொலை செய்யப்பட்டிருந்தார். கொலையாளிகள் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை.


மகிந்த ராசபக்ச குடும்பத்தினருக்கு நெருக்கமான அசங்க செனவிரத்தின என்பவரே இந்தப் பத்திரிகையின் பங்குகளில் 72 சதவீதத்தை வாங்கியிருந்தார். இவர் ராஜபக்ச குடும்பத்தினரை விமர்சிக்கும் கட்டுரைகளையோ அல்லது செய்திகளையோ வெளியிடக்கூடாது என்றும், தான் எழுதும் பாணியை மாற்றிக் கொள்ள வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டதாக ஜான்ஸ் கூறினார். இந்த உத்தரவை ஏற்க மறுத்ததாலேயே தனக்கு வழங்கப்பட்ட பணி ஒப்பந்தம் நீடிக்கப்படவில்லை என அவர் கூறினார்.


கடந்த ஆண்டில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா பிரெடெரிக்கா ஜான்சுக்கு வழங்கிய சர்ச்சைக்குரிய நேர்காணல் குறித்து இராணுவ நீதிமன்றத்தில் பிரெடெரிக்கா சார்ட்சி சொல்ல வேண்டியிருந்தது. ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் சரணடைந்த விடுதலைப் புலிகளை கொல்லுமாறு பாதுகாப்புத்துறை அமைச்சர் கோத்தாபய ராஜபக்ச உத்தரவு பிறப்பித்திருந்ததாக பொன்சேக்கா தனது நேர்காணலில் கூறியிருந்தார். இதை அவர் பின்னர் மறுத்திருந்தார்.


மூலம்

தொகு