இலங்கைத் துடுப்பாட்ட அணியின் புதிய தலைவராக மகேல நியமனம்

புதன், சனவரி 25, 2012

இலங்கைத் துடுப்பாட்ட அணியின் தலைவராகப் பணியாற்றி வந்த திலகரத்ன தில்சான் தேர்வு, பன்னாட்டு ஒருநாள், மற்றும் இருபது-20 ஆகிய மூன்று துடுப்பாட்ட அணிகளுக்கான தலைவர் பொறுப்பில் இருந்து விலகி உள்ளார். அவருக்குப் பதிலாக மகேல ஜயவர்தன தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இத்தகவலை இலங்கை துடுப்பாட்ட வாரியம் உறுதிப்படுத்தியுள்ளது.


கடந்த உலகக்கிண்ண துடுப்பாட்டத் தொடரை அடுத்து தலைவராக இருந்த குமார் சங்கக்கார பதவி விலகியதனைத் தொடர்ந்து இலங்கை அணியின் தலைவராக திலகரத்ன தில்ஷான் தெரிவு செய்யப்பட்டார். இவரின் தலைமையின் கீழ் இங்கிலாந்து, பாக்கித்தான், தெனாப்பிரிக்கா, அவுத்திரேலியா அணிகளுக்கு எதிராக பங்கேற்ற தொடர்களின் தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து வந்தமையினால் தென்னாபிரிக்காவுடனான தொடருடன் தனது பதவியைத் துறந்துள்ளார்.


அடுத்த மாதம் அவுத்திரேலியாவில் நடைபெற உள்ள முத்தரப்பு ஒருநாள் தொடரில் அணித்தலைவர் பொறுப்பை மகேல ஜயவர்தனாவே வகிப்பார். 34 வயதான மகேல ஜயவர்தன, ஏற்கெனவே 2006 முதல் 2009 ஆம் ஆண்டுவரை இலங்கை அணிக்குத் தலைமை தாங்கி பல வெற்றிகளை பெற்றுக் கொடுத்திருந்தார். ஏஞ்சலோ மத்திவ்ஸ் தொடர்ந்தும் உபதலைவராகப் பதவியில் இருப்பார்.


அதே நேரம் இலங்கை அணியின் புதிய பயிற்றுவிப்பாளராக கிரகாம் போர்ட் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளராகப் பணியாற்றியவர். இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளராக ஜெஃப் மார்ஷ் நியமிக்கப்பட்டு ஐந்து மாதங்களுக்குள் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


மூலம் தொகு