இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்கு சீனா ஆதரவளிக்கும்

வெள்ளி, செப்டெம்பர் 9, 2011

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரப்படவுள்ள எந்தவொரு மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும் இலங்கைக்கு ஆதரவளிக்க சீனா உறுதியளித்துள்ளது. இந்த உறுதிமொழியை சீன ஜனாதிபதி ஹூ ஜிந்தாவோ பிரதமர் டி. எம். ஜயரட்ணவிடம் தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றச் செயல்களில் இலங்கை ஈடுபட்டதென்று சர்வதேச ரீதியில் விசாரணையொன்றை ஏற்படுத்தி இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொண்டுவர மனித உரிமைகள் பேரவை முயன்று வரும் நிலையிலே இத்தகைய உறுதிமொழியை சீனா வழங்கியுள்ளது. இலங்கையின் இறைமையை பேணிப் பாதுகாப்பதற்கு சீனா தன்னுடைய முழு ஆதரவையும் நல்குமென்றுவும் உறுதியளித்துள்ளது.


இலங்கைப் பிரதமர் டி.எம்.ஜயரட்ண தற்போது சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது இரு தலைவர்களும் நடைமுறை விடயங்கள் குறித்து கலந்துரையாடினர். இலங்கையின் சுதந்திரம், இறைமையை சீனா மதிக்கிறது. அத்துடன், நாட்டின் அபிவிருத்திக்கும் உதவி புரிய முன்வருவதாக சீன ஜனாதிபதி குறிப்பிட்டார். சீனா இலங்கை இன்று அபிவிருத்திப் பாதையில் முன்னேறிக்கொண்டிருப்பது குறித்து பெருமை படுகிறதென்றும் அதன் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கொள்கைகள் சிறப்புற்று விளங்குகிறதென்றும் சீன ஜனாதிபதி இலங்கை பிரதமரிடம் தெரிவித்ததாக சின்யுவா செய்தி சேவை அறிவித்தது.


மூலம் தொகு