இராணுவக் காவலில் இருந்த பிரபாகரனின் தந்தை காலமானார்

There are no reviewed versions of this page, so it may not have been checked for adherence to standards.

வெள்ளி, சனவரி 8, 2010


தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் தந்தையாரான திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் இராணுவக் காவலில் இருக்கும் போது புதன்கிழமை இரவு காலமானதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.


உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த 86 வயதான அவரது மரணம் இயற்கையாக ஏற்பட்டது என்று இராணுவப் பேச்சாளர் உதய நானயக்கார பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.


பிரபாகரன் அவர்களின் பெற்றோர் பனாகொடையில் இருந்த ராணுவ கண்டோன்மெண்ட் பகுதியில் இராணுவத்தின் பாதுகாப்பில் இருந்ததாகவும் இலங்கை இராணுவம் கூறுகிறது.


மறைந்த திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் மனைவியின் விருப்பத்தின் பேரில் அவரது இறுதிக் கிரியைகள் இடம் பெறும் என்றும், அவரது இரு மகள்களோ அல்லது மகனோ உடலைக் கோரினால் அதன் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இராணுவப் பேச்சாளர் கூறுகிறார்.


1924, ஜனவரி 10ஆம் நாள் பிறந்த திருவேங்கடம் வேலுப்பிள்ளை ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தராவார். 1943 ம் ஆண்டு தொடக்கம் 1982 ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் அரச காணி உத்தியோகத்தராகக் கடமையாற்றியுள்ளார். நான்கு பிள்ளைகளின் தந்தையான அவரரின் இளைய மகனே பிரபாகரனாவார்.


கடந்த மே மாதம் நடைபெற்ற இறுதிக் கட்ட மோதல்களின் போது மோதல் வலயத்திலிருந்து இரானுவத்தினரிடம் சரணடைந்த வேளை வேலுப்பிள்ளை மற்றும் அவரது மனைவி ஆகியோர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கபபட்டிருந்தனர். இதனையடுத்து மேலதிக விசாரணகளுக்காக இவர்கள் கொழும்புக்குக் கொண்டுவரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மூலம்

தொகு