இரயில் பயணங்களில் புகழ் நடிகர் ஸ்ரீநாத் தற்கொலை

There are no reviewed versions of this page, so it may not have been checked for adherence to standards.

வெள்ளி, ஏப்பிரல் 23, 2010

இரயில் பயணங்களில் திரைப்படத்தில் (1981) கதாநாயகனாக நடித்த பிரபல மலையாள நடிகர் ஸ்ரீநாத் இன்று தற்கொலை செய்து கொண்டதாகக் கேரளக் காவல்துறையினர் அறிவித்துள்ளனர். இறக்கும் போது அவருக்கு வயது 50.


‘ஷிக்கார்’ என்ற மோகன்லால் படத்தில் நடிப்பதற்காக எர்ணாகுளம் அருகே உள்ள கோதமங்கலத்தில் நட்சத்திர விடுதி ஒன்றில் தங்கியிருந்தார். இன்று காலை அவரது அறைக்கதவு நீண்டநேரமாக திறக்கப்படாததால் காவல்துறையினரின் உதவியுடன் கதவை திறந்து பார்த்தபோது ஸ்ரீநாத் இறந்து கிடக்கக் காணப்பட்டார். அவரது கைநரம்பு அறுந்து இருந்தது தெரிந்தது. இது தற்கொலையாக இருக்கலாம் எனக் காவல்துறையினர் தெரிவித்தனர்.


டி. ராஜேந்தர் இயக்கிய இரயில் பயணங்களில் அறிமுகமானார் ஸ்ரீநாத். அந்தப் படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. இப்படத்தின் வெற்றிக்குப் பின்னர் மலையாளத்தில் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் சின்னமுள் பெரியமுள் என்ற படத்திலும் நடித்துள்ளார். ஷாலினி என்டே கூட்டுக்காரி, ஏது நிஜங்களுடே கதா, ஒரு சி.பி.ஐ. டைரிக்குறிப்பு”, கிரீடம் போன்ற படங்கள் இவர் நடித்த மலையாள படங்களில் புகழ் பெற்றன. தற்போது தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வந்தார். சிறந்த தொலைக்காட்சி நடிகராக தேர்ந்தெடுக்கப்பட்டு விருது பெற்றுள்ளார்.


நடிகை சாந்தி கிருஷ்ணாவை திருமணம் செய்தார். அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனவே இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். சில ஆண்டுகளுக்கு பிறகு வேறு ஒரு பெண்ணை மறுமணம் செய்து கொண்டார்.


கடந்த நடாளுமன்றத் தேர்தலில் ஆட்டிங்கள் தொகுதியில் சிவசேனா வேட்பாளராக போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.


இவரது இறப்புக் குறித்து கோதமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலம்

தொகு