இந்துக் கோயில் விவகாரம்: தாய்லாந்து கம்போடிய எல்லையில் மீண்டும் மோதல்

சனி, ஏப்பிரல் 23, 2011

தாய்லாந்து, மற்றும் கம்போடிய எல்லைப் பகுதியில் இரு நாட்டு இராணுவத்தினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களில் குறைந்தது 6 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.


பிரியா விகார் கோயிலின் அமைவிடம்

இரு நாடுகளும் உரிமை கோரும் டா கிராபே கோயிலைச் சுற்றியுள்ள காட்டுப் பகுதியில் எறிகணை மற்றும் துப்பாக்கித் தாக்குதல்கள் இடம்பெற்றன. இக்கோயில் பகுதி 900-ஆண்டுகள் பழமையான புகழ் பெற்ற பிரியா விகார் கோயிலுக்கு 200 கிமீ மேற்கே அமைந்துள்ளது. பிரியா விகார் கோயில் உரிமை தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையில் எல்லைப் பிரச்சினை தொடரும் வேளையிலேயே புதிய மோதல்கள் இடம்பெற்றுள்ளன.


ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். புதிய மோதல்கள் வெள்ளிக்கிழமை காலை 0600 மணியளவில் ஆரம்பித்ததாக தாய்லாந்து இராணுவத் தகவல் தொடர்பாளர் தெரிவித்தார். "சண்டையை நிறுத்துவதற்கு நாங்கள் பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளோம்," என அவர் தெரிவித்தார்.


வெள்ளிக்கிழமை மோதலில் தமது தரப்பில் மூன்று பேர் கொல்லப்பட்டதாகவும் ஆறு பேர் காயமடைந்ததாகவும் தாய்லாந்து அறிவித்த அதே வேளையில், தமது தரப்பில் மூன்று பேர் கொல்லப்பட்டு 11 பேர் காயமடைந்ததாக கம்போடியா அறிவித்துள்ளது.


பன்னாட்டு நீதிமன்றத் தீர்ப்பை அடுத்து பிரியா விகார் கோயில் 1962 ஆம் ஆண்டு கம்போடியாவிடம் கையளிக்கப்பட்டது.


தொடர்புள்ள செய்திகள் தொகு

மூலம் தொகு