பண்டைய இந்து சிற்பங்கள் கம்போடியாவுக்கு திரும்பக் கொண்டு வரப்பட்டன

This is the stable version, checked on 23 சூலை 2018. Template changes await review.

வியாழன், சூன் 5, 2014

பல ஆண்டுகளுக்கு முன்னர் கம்போடியக் கோவில் ஒன்றில் இருந்து திருடப்பட்ட 1000-ஆண்டுகள் பழமையான மூன்று இந்து சிலைகள் மீளவும் கம்போடியாவுக்குக் கொண்டு வரப்பட்டன. இச்சிலைகளை வரவேற்க கடந்த செவ்வாய் அன்று தலைநகர் நோம் பென்னில் வைபவம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.


புகழ் பெற்ற அங்கூர் வாட் கோவில் அமைந்துள்ள சியாம் ரீப் மாகாணத்தில் உள்ள கோ கேர் கோவிலில் இருந்து உள்நாட்டுப் போர்க்காலத்தில் இச்சிலைகள் திருடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


ஐக்கிய அமெரிக்காவில் இருந்து கொண்டுவரப்பட்ட இச்சிலைகள் இந்துத் தொன்மப் பாத்திரங்களான துரியோதனன், பலராமன், மற்றும் பீமன் ஆகியோருடையது எனக் கருதப்படுகிறது.


"கடந்த 40 ஆண்டுகளாக உள்நாட்டுப் போர்கள், களவு, கடத்தல், மற்றும் உலகச் சுற்றுலா போன்றவற்றில் இருந்து தப்பியிருந்த இச்சிலைகள் இறுதியாக தமது சொந்த இடத்துக்குத் திரும்பியுள்ளன," என பிரதிப் பிரதமர் சோக் ஆன் கூறினார். உலக அருங்காட்சியகங்களில் உள்ள இவை போன்ற சிற்பங்களும் திரும்பக் கிடைக்க வேண்டும் என அவர் கூறினார்.


5 அடி உயர துரியோதனன் சிலை 1972 இல் திருடப்பட்டு 1975 இல் லண்டனில் ஏலத்தில் விற்கப்பட்டது. இது பின்னர் நியூயோர்க் சோதர்பி ஏலவகத்தில் விற்கப்படவிருந்ததை கம்போடிய அதிகாரிகளின் மேன்முறையீட்டை அடுத்து விற்பனை நிறுத்தப்பட்டது. பல்வேறு சட்டச் சிக்கல்களின் இறுதியில் இச்சிலை கம்போடியாவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.


பீமனின் சிலை 1976 இல் கலிபோர்னியாவில் உள்ள நோர்ட்டன் சைமன் அருங்காட்சியகத்தினால் வாங்கப்பட்டது. பல மாதங்களாக நடந்த பேச்சுவார்த்தைகளை அடுத்து, அவர்கள் இப்போது இதனை கம்போடியாவுக்கு "அன்பளிப்பாகக்" கொடுத்துள்ளார்கள்.


பலராமனின் சிலை அமெரிக்காவின் கிறிஸ்டி ஏலவகத்துக்கும் கம்போடிய அரசுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட உடன்பாட்டை அடுத்து திரும்பக் கொடுக்கப்பட்டது.


மூலம்

தொகு