இந்துக் கோயில் எல்லைப் போர் குறித்து கம்போடியா ஐநாவுக்கு முறையீடு

This is the stable version, checked on 22 சூலை 2018. Template changes await review.

செவ்வாய், பெப்பிரவரி 8, 2011

900-ஆண்டுகள் பழமையான பிரியா விகார் கோயில் தொடர்பான தாய்லாந்துடனான எல்லைப்போரை முடிவுக்குக் கொண்டுவர ஐக்கிய நாடுகளின் தலையீட்டை கம்போடியப் பிரதமர் உன் சென் நாடியிருக்கிறார்.


பிரியா விகார் கோயிலின் அமைவிடம்
பிரியா விகார் கோயில்

கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமாகிய புதிய சுற்றுப் போரில் பலர் கொல்லப்பட்டுள்ளதாக கம்போடிய அரசு தெரிவித்துள்ளது. இறந்தவர்களில் ஒருவர் சுற்றுலாப் பயணி எனக் கூறப்படுகிறது.


கம்போடிய-தாய்லாந்து எல்லையில் உள்ள கோயிலைச் சுற்றியுள்ள பிரதேசத்தை தாய்லாந்து கைப்பற்ற எண்ணியிருக்கிறது என உன் சென் தெரிவித்தார். மேலும் போரைத்தடுக்க அமைதிப்படையினரை சர்ச்சைக்குரிய பகுதிக்கு அனுப்ப வேண்டும் என ஐநாவை உன் சென் கேட்டுள்ளார்.


1960களில் இக்கோயில் பன்னாட்டு நீதிமன்றத்தின் மேற்பார்வையில் கம்போடியப் பிரதேசமாக இருந்தது. ஆனாலும், 2008 ஆம் ஆண்டில் இக்கோயில் யுனெஸ்கோவினால் உலக பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, இந்தப் பிரதேசத்தின் உரிமை குறித்து இரண்டு நாடுகளுக்கும் இடையே இருந்துவந்த சர்ச்சை மீள உருவெடுத்தது. இதையடுத்து இரு நாடுகளும் தமது எல்லைப்புறத்த்தில் பெருமளவு துருப்புக்களைக் குவித்து வைத்துள்ளது.


உலக பாரம்பரியக் களப் பட்டியலில் இருந்து இக்கோயிலை எடுத்துவிடும்படி தாய்லாந்து யுனெஸ்கோவைக் கோரவிருக்கிறது. போர் தொடங்கிய நாளில் இருந்து கோயில் பெரும் சேதத்துக்குள்ளாகியிருப்பதாக கம்போடியா குற்றம் சாட்டுகிறது. ஆனால் இதனை தாய்லாந்து மறுத்து வருகிறது.


பிரியா விகார் கோயில் கிபி 11-12ம் நூற்றாண்டுகளில் முதலாம் மற்றும் இரண்டாம் சூரியவர்மன் காலத்தில் கட்டப்பட்ட சிவன் கோயில். 1962இல் தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையில் இக்கோயிலின் உரிமை தொடர்பாக பெரும் சர்ச்சை ஏற்பட்டு ஹேக் நகரில் அமைந்துள்ள பன்னாட்டு நீதிமன்றத்தில் முறையிடப்பட்டு கம்போடியாவுக்கு இக்கோயிலின் உரிமை வழங்கப்பட்டது. இக்கோயிலை அடுத்துள்ள நிலம் தாய்லாந்துக்குச் சொந்தமானதாகும். கெமர் பேரரசினால் கட்டப்பட்ட கோயில்களில் பிரியா விகார் மிகவும் புகழ் வாய்ந்ததும் கண்ணுக்குக் குளிர்ச்சியான அமைப்பையும் கொண்டுள்ளது.


தொடர்புள்ள செய்திகள்

தொகு

மூலம்

தொகு