இந்திய வெளியுறவு செயலர் நிருபமாராவ் இலங்கை பயணம்

This is the stable version, checked on 31 சனவரி 2011. 2 pending changes await review.

திங்கள், சனவரி 31, 2011

இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் நேற்று ஞாயிற்றுக்கிழமை உத்தியோகபூர்வப் பயணம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள் அண்மையில் இலங்கைக் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட பிரச்சினை குறித்து இலங்கை அரசுடன் விவாதிக்க இவர் வந்துள்ளதாக தெரிகிறது.


இன்று திங்கட்கிழமை காலை இவர் அரசுத்தலைவர் மகிந்த ராஜபக்ச, மற்றும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிசு ஆகியோரையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாக தெரியவருகிறது.


தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியின் வேண்டுகோளுக்கு அமையவே இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவின் பிரதிநிதியாக திருமதி நிருபமாராவ் இலங்கை வந்துள்ளதாக தமிழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இந்திய மீனவர்கள் தொடர்பான பிரச்சினைகள் அண்மைக் காலமாக எழுந்துள்ள நிலையில் இரு நாட்டு மீனவர்களின் மீன்பிடிப்பதற்கான எல்லைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.


இலங்கைச் செய்திப் பத்திரிகைகளின் செய்திகளின்படி கடந்த வாரம் இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட மீனவர்கள் தொடர்பாகவும் இந்தியாவிலுள்ள இலங்கையின் பௌத்தமகா சம்மேளனம் தாக்கப்பட்டமை தொடர்பாகவும் இப்பேச்சுவாரத்தையின் போது சிறப்புக் கவனம் மேற்கொள்ளப்படுமென தெரிகிறது.


இதேநேரம் இலங்கையின் வடக்கே முறிகண்டி பிரதேசத்தில் இன்னும் மீள்குடியேற்றப்பட வேண்டிய பகுதிகளில் மீள்குடியேற்றம் செய்யப்படாமையினால் அங்குள்ள தமது காணிகள் பறிபோய் விடுமோ என்று அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் அச்சம் வெளியிட்டிருக்கின்றார்கள். தாமதமின்றி அந்தப் பகுதிகளில் தம்மை மீள்குடியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் மீண்டும் கோரிக்கை விடுத்திருக்கின்றார்கள். இது தொடர்பாக இலங்கை வந்துள்ள இந்திய வெளியுறவுச் செயலாளருக்கு விண்ணப்பம் ஒன்றை அவர்கள் அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரியவருகின்றது.


மூலம்

தொகு