இந்திய நடுவண் அமைச்சர் தயாநிதி மாறன் பதவி விலகினார்

வியாழன், சூலை 7, 2011

இந்தியாவில் இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஊழல் விவகாரத்தில் தொடர்பாக இந்திய நடுவண் புடவைத்துறை அமைச்சர் தயாநிதி மாறன் தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.


2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில், திமுகவைச் சேர்ந்த தயாநிதி மாறன் ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை மலேசிய நிறுவனம் ஒன்றுக்கு விற்க நிர்பந்தித்தார் என்று மத்திய புலனாய்வு அமைப்பு உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை சமர்பித்த அறிக்கையை அடுத்து தயாநிதி மாறன் பதவி விலகியுள்ளார்.


இன்று வியாழக்கிழமை காலை புதுடில்லியில் இடம்பெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து தனது பதவி விலகல் கடிதத்தை அவர் அளித்தார்.


இந்திய தொலைத்தொடர்புத் துறையில் இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பில் பல மில்லியன் டாலர்கள் அளவில் ஊழல் இடம்பெற்றுள்ளதாக புகார்கள் எழுந்தது. இந்த ஊழல் வழக்கு இந்திய அரசுக்குப் பெரும் நெருக்கடியைக் கொடுத்து வருகின்றது. இந்நிலையில், திமுகவைச் சேர்ந்த ஆ ராசா தொலைத்தொடர்பு அமைச்சர் பதவியிலிருந்து விலகினார். ராசாவுக்கு முன்னதாக தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக இருந்த மாறன் ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை மலேசிய நிறுவனத்துக்கு விற்க, ஏர்செல் நிறுவனத்தின் தலைவருக்கு அழுத்தம் கொடுத்ததாகப் புகார்கள் எழுந்தன. ஆனாலும், இக்குற்றச்சாட்டுகளை தயாநிதி மாறன் மறுத்துள்ளார்.


இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஏலத்தில் நடந்த முறைகேடுகளால் அரசிற்கு 39 பில்லியன் அமெரிக்க டாலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அரசுக் கணக்காய்வாளர் தெரிவித்திருக்கிறார். இத்தொகை ஓராண்டுக்கான நாட்டின் பாதுகாப்புச் செலவீனத்துக்கு சமமானதாகும்.


அலைக்கற்றை ஊழல் தொடர்பாக திமுக ராஜியசபா உறுப்பினர் கனிமொழி மீது ஏற்கனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளார்.


இதனிடையே, தயாநிதி மாறன் வகித்து வந்த மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பொறுப்பை டி.ஆர். பாலுவுக்கு வழங்கும்படி திமுக தரப்பில் கோரப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.


மூலம் தொகு