இந்திய நடுவண் அமைச்சரவையிலிருந்து திமுக வெளியேறும் முடிவு நிறுத்திவைப்பு

This is the stable version, checked on 22 சூலை 2018. Template changes await review.

செவ்வாய், மார்ச்சு 8, 2011

இந்தியாவில் தமிழகம் உள்பட ஐந்து மாநிலச் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திமுக நடுவண் அமைச்சரவையிருந்து விலகி இருப்பதாகவும், பிரச்சினைகளின் அடிப்படையில் நடுவண் அரசிற்குத் தொடர்ந்து ஆதரவளிப்பதாகவும் நேற்று முன்தினம் சனிக்கிழமை அறிவித்திருந்தது.


இதற்குக் காரணமாக, 'காங்கிரஸ், கூட்டணிப் பேச்சுக்களில் தி.மு.க.விற்கு அதிக நிர்பந்தங்களை ஏற்படுத்துவதாகக் குற்றம் சாட்டப்பட்டது. எனவே, தி.மு.க.வைச் சேர்ந்த நடுவண் அமைச்சர்கள் மு.க. அழகிரி, தயாநிதிமாறன் ஆகியோரும், இணை அமைச்சர்கள் நெப்போலியன், பழனி மாணிக்கம், காந்தி செல்வன், ஜெகத்ரட்சகன் ஆகியயோரும் இன்று திங்கள்கிழமை தங்களது பதவி விலகுதலுக்கான கடிதங்களை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அளிப்பார்கள் என்று தி.மு.க.வால் திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக இவ்வமைச்சர்கள் அனைவரும் இன்று காலை தில்லி சென்றனர்.


இதற்கிடையே நடுவண் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, தி.மு.க. அமைச்சர்கள் பதவி விலகும் கடிதம் அளித்தலை தற்காலிகமாக நிறுத்திவைக்க வேண்டுகோள் விடுத்தார். மேலும் காங்கிரஸ்-தி.மு.க. இடையே உள்ள பிரச்சினைகளைத் தீர்க்க இன்னொருமுறை பேச்சு நடத்தலாம் என்றும் அவர் தெரிவித்ததாகத் தகவல்கள் வெளியாயின. எனவே தி.மு.க. அமைச்சர்கள் பதவி விலகுவது இன்று மாலை வரை ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் இன்று மாலைக்குள் எந்த முடிவையும் காங்கிரசால் எட்ட முடியவில்லை. இந்நிலையில், பிரணாப் முகர்ஜி இன்று தி.மு.க. தலைவர் கருணாநிதியைத் தொடர்பு கொண்டு இருமுறை பேசியதாகவும், காங்கிரசின் முடிவைத் தெரிவிக்க இன்னும் ஒரு நாள் அவகாசம் கேட்டதாகவும், தமிழகத்தின் துணை முதல்வர் சுடாலின் இன்று மாலை செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்தார்.


எனவே தி.மு.க. அமைச்சர்கள் அமைச்சரவையிலிருந்து பதவி விலகுவது தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.


தொடர்புள்ள செய்திகள்

தொகு

மூலம்

தொகு