இந்திய நடுவண் அமைச்சரவையிலிருந்து திமுக வெளியேற முடிவு
ஞாயிறு, மார்ச்சு 6, 2011
- 12 செப்டெம்பர் 2020: தமிழகத்தில் செப்.30 வரை தளர்வுகளுடன் இ-பாஸ் இல்லாத பொது முடக்கம் நீட்டிப்பு
- 27 மே 2018: தூத்துக்குடி செய்தி இன்று
- 25 பெப்பிரவரி 2018: நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணமடைந்தார்
- 16 பெப்பிரவரி 2018: காவிரி நீரில் தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க உச்ச நீதிமன்றம் ஆணை
- 6 பெப்பிரவரி 2018: நாட்டுபுறவியல் உதவி பேராசிரியர் பணி நாட்டுபுறவியல் மாணவர்களுக்கே
இந்தியாவில் தமிழகம் உள்பட ஐந்து மாநிலச் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திமுக நடுவண் அமைச்சரவையிருந்து விலகி இருப்பதாகவும், பிரச்சினைகளின் அடிப்படையில் நடுவண் அரசிற்குத் தொடர்ந்து ஆதரவளிப்பதாகவும் நேற்று சனிக்கிழமை அறிவித்துள்ளது.
தி.மு.க. - காங்கிரஸ் இடையே தொகுதி உடன்பாடு குறித்த பேச்சு தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருந்தன. இப்பேச்சு நடைபெற்றுக்கொண்டிருக்கையிலேயே தி.மு.க.- காங்கிரஸ் இடையேயான உறவுகள் குறித்துப் பல கருத்துக்கள் பல அரசியல் வல்லுனர்களால் முன்வைக்கப்பட்டன.
பிரதமர் மன்மோகன் சிங்கின் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் ஒரு அங்கமாக இருக்கும் தி.மு.க., நடுவண் அரசின் அமைச்சரவையிலும் முதன்மையாகப் பங்கு வகித்தது. தற்போதைய நிலைமையில் மு.க. அழகிரி, தயாநிதி மாறன் ஆகியோர் அமைச்சர்களாகவும், நெப்போலியன், ஜெகத்ரட்சகன், பழனி மாணிக்கம், காந்தி செல்வன் ஆகியோர் இணை அமைச்சர்களாகவும் பதவி வகிக்கின்றனர். தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த ஆ. ராசா, சில மாதங்களுக்கு முன், அலைக்கற்றை ஊழல் பிரச்சினையில் தனது பதவியைத் துறந்திருந்தார்.
இந்நிலையில் தமிழகச் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அதைதொடர்ந்து, தமிழகத்தில் முதன்மையான அரசியல் கட்சிகளிடையே கூட்டணிக்கான பேச்சுக்கள் மிக வேகமாக நடைபெற்றன. காங்கிரஸ்- தி.மு.க. இடையே கூட்டணி குறித்துப் பேச, காங்கிரஸ் சார்பில் ஐவர் குழு அமைக்கப்பட்டது. இந்த ஐவர் குழு -தி.மு.க. இடையே நடந்த பேச்சுக்களில் தொடக்கத்திலிருந்தே இழுபறி நீடித்தது. இருப்பினும் இது குறித்து தி.மு.க., காங்கிரஸ் தலைவர்கள் எவரும் வெளிப்படையான எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. இடையில் இந்த ஐவர் குழு தி.மு.க.-வுடன் அதிருப்தியடைந்து பேச்சுக்களில் இருந்து பின்வாங்கியது. எனவே, காங்கிரஸ் சார்பில் குலாம் நபி ஆசாத் சென்னை வந்து பேச்சுக்களைத் தொடர்ந்தார். அவரும் பேச்சுக்களை முடித்துக்கொல்லாமலே தில்லி திரும்பினார். அலைக்கற்றை ஊழல் பிரச்சினை தி.மு.க.-விற்கு, தேர்தலைச் சந்திப்பதில் பெரும் சவாலாக இருக்கும் என்ற நிலையில், காங்கிரஸ், ஆட்சியில் பங்கு, அதிக இடங்கள்- அதுவும் தாங்கள் விரும்பும் இடங்கள் என்று கோரிக்கைகளை அதிகரித்துக் கொண்டே சென்றதால் கூட்டணிப் பேச்சு இழுபறியில் இருப்பதாகக் கூறப்பட்டது. இருப்பினும் கூட்டணிக்கான பேச்சு தொடர்கிறது; நல்ல முடிவு எட்டப்படும் என்றே இரு கட்சிகளின் சார்பிலும் தெரிவிக்கப்பட்டது.
தி.மு.க., காங்கிரஸ் கட்சிக்கு 60 தொகுதிகள் வரை தர முன்வந்தது. ஆனால் காங்கிரஸ் கட்சி 63 இடங்களும், வேண்டிய தொகுதிகளும் தர வேண்டும் என கோரியது.
நேற்று முன்தினம் முதல் முறையாக, தி.மு.க.-வின் தலைவர் கருணாநிதி, காங்கிரஸ் அதிக இடங்களைக் கேட்பதில் எந்த வித நியாயமும் இல்லை என்று செய்தியாளர்களிடம் பேசுகையில் குறைபட்டுக் கொண்டார். அதைத் தொடர்ந்து நேற்று மாலை தி.மு.க. தலைமையகத்தில் நடந்த அக்கட்சியின் உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் குறித்த கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இக்கூட்டத்தின் இறுதியில் நடுவண் அமைச்சரவையிலிருந்து தனது கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களை விலக்கிக் கொள்வதாகவும், பிரச்சினைகள் அடிப்படையில் நடுவண் அரசிற்குத் தொடர்ந்து ஆதரவளிப்பதாகவும் கருணாநிதி அறிவித்தார்.
மூலம்
தொகு- DMK tests Cong's coalition compulsion, quits govt, டைம்ஸ் ஆஃப் இந்தியா, மார்ச் 6, 2011
- மத்தியஅரசில் இருந்து தி.மு.க., விலகல்: நெருக்கடி தந்த காங்கிரசுக்கு பதிலடி, தினமலர், மார்ச் 6, 2011