இந்தியாவில் பீகார் தொடர் வண்டியில் கொள்ளை

வெள்ளி, ஆகத்து 6, 2010

இந்தியாவில் பீகாரில் சென்றுகொண்டிருந்த தொடருந்து ஒன்றில் குளிர் சாதனப் பயணிகள் பெட்டிகளுக்குள் நுழைந்த சுமார் ஐம்பது ஆயுதம் ஏந்திய கொள்ளையர்கள் பயணிகளைத் தாக்கி துப்பாக்கி முனையில் கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.


கௌரா - டெல்லி லால் குய்லா சொகுசு தொடருந்து தில்லியை நோக்கிப் பயணித்தப் போது பீகாரில் உள்ள லக்கிசரி மாவட்டத்தில் பன்சிபூர் மற்றும் பாலுய் தொடருந்து நிலையங்களின் இடைப்பட்ட இடத்தில் இன்று அதிகாலையில் இக்கொள்ளை நடைபெற்றுள்ளது


கொள்ளையர்களால் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டும் 25 பயணிகள் காயம் அடைந்தும் உள்ளனர். தொடருந்து பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒருவரும் சுடப்பட்டார்.


பின்னர் கியூல் தொடருந்து நிலையத்தை வண்டி அடைந்த போது பயணிகள் நிலைய அதிபரின் அலுவலகத்தைச் சுற்றி வளைத்து அதனைத் தாக்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ரெயில்வே பாதுகாப்பு அதிகாரிகளோ அல்லது காவல்துறையினரோ தொடருந்துக்கு ஏன் பாதுகாப்புத் தரவில்லை என அவர்கள் கேள்வி எழுப்பினர். பீகார் காவலர்கள் அந்த குற்றச்சாட்டை மறுத்தனர். தொடருந்தில் ஒரு வழிக் காவலர் இருந்ததாகவும் ஆனால் அவரிடம் ஆயுதம் இல்லை என்றும் கூறினர்.

"நாலு கொள்ளையர்கள் முதலில் ஜமூயி நிலையத்தில் தொடருந்தினுள் ஏறினர். அவர்களை அங்கிருந்த பயணிகளும் பாதுகாப்பு ஊழியர்களும் மடக்கிப் பிடித்தனர் இருவர் பிடிபட்டனர், வேறும் இருவர் தப்பி ஓடி விட்டனர். அதன் பின்னர் அடுத்த தரிப்பு நிலையத்தில் ஏனைய கோளையர்கள் ஏறி தம் கைவரிசையைக் காட்டியுள்ளனர்," எனக் காவல்துறையச் சேர்ந்த ஒருவர் தெரிவித்தார்.

மூலம்

தொகு