இந்தியக் காந்தியவாதி அண்ணா அசாரே உண்ணாவிரதத்தைக் கைவிட்டார்
சனி, ஏப்பிரல் 9, 2011
- 11 பெப்பிரவரி 2024: அயோத்தி இராமர் கோயில் திறப்பு விழா
- 12 செப்டெம்பர் 2020: தமிழகத்தில் செப்.30 வரை தளர்வுகளுடன் இ-பாஸ் இல்லாத பொது முடக்கம் நீட்டிப்பு
- 25 மே 2018: தூத்துக்குடி செய்தி இன்று
- 25 பெப்பிரவரி 2018: நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணமடைந்தார்
- 16 பெப்பிரவரி 2018: 11000 கோடி பஞ்சாப் நேசனல் வங்கி ஊழல் நீரவ் மோதி தலைமறைவு
இந்தியாவில் ஊழலுக்கு எதிராக சட்டங்களைப் பலப்படுத்தக் கோரி கடந்த 4 நாட்களாக உண்ணாநோன்பிருந்து வந்த அண்ணா அசாரே இந்திய நடுவண் அரசு அவரது கோரிக்கைகள் அனைத்தையும் ஏற்றதை அடுத்து தமது போராட்டத்தைக் கைவிட்டார்.
காந்தியவாதியும் செல்வாக்கு மிக்க சமூகநல ஆர்வலருமான அண்ணா அசாரே (அகவை 72) ஊழல் செய்யும் அரசியல்வாதிகள், அதிகாரிகள், நீதிபதிகள் உள்ளிட்டோர் மீது விசாரணை நடத்தும் அதிக அதிகாரம் கொண்ட அமைப்பை உருவாக்குவதற்கான திருத்தப்பட்ட லோக்பால் (ஜன் லோக்பால்) மசோதாவை அறிமுகப்படுத்த வேண்டும், இதற்கான சட்டவரைவுக் குழுவில் மக்கள் சமூகப் பிரதிநிதிகளையும் உள்ளடக்க வேண்டும் என்றும் ஊழல் முறியடைப்புச் சட்டங்கள் பலப்படுத்தப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தி போராட்டம் நடத்தி வந்தார். இந்தப் போராட்டத்துக்கு நாடு முழுவதிலுமிருந்து அரசியல்வாதிகள், ஆன்மிகவாதிகள், சமூக ஆர்வலர்கள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்தனர். நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அசாரேக்கு ஆதரவாக உண்ணாவிரதப் போராட்டங்களும் நடைபெற்றன.
"எங்களது அனைத்து கோரிக்கைகளையும் மத்திய அரசு ஏற்றுக் கொண்டிருக்கிறது. எனவே, எனது உண்ணாவிரதத்தை சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு முடித்துக் கொள்கிறேன். இது நமது நாட்டுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி' என்று அண்ணா அசாரே கூறினார்.
கடந்த சில மாதங்களாக ஊழல் குற்றச்சாட்டுகளாலும் விசாரணைகளாலும் பெரும் அழுத்தத்தை சந்திருந்த ஆளும் காங்கிரஸ் கூட்டணிக்கு அசாரேவின் போராட்டம் இன்னும் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ. ராசா அலைக்கற்றை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரணைக்காகக் காத்திருக்கிறார்.
மும்பையில் போரில் தமது கணவன்மாரை இழந்த விதவைப் பெண்களுக்காகக் கட்டப்பட்ட வீடுகள் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட செய்தி அண்மையில் வெளி வந்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்தியாவின் ஊழலுக்கு எதிரான கண்காணிப்பகத்தின் தலைவர் ஊழலில் சம்பந்தப்பட்டிருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு சென்ற மாதம் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
மத்திய அரசுக்கும், அசாரேயின் பிரதிநிதிகளுக்கும் இடையே எட்டப்பட்ட உடன்பாட்டின்படி, லோக்பால் என்ற ஊழல் எதிர்ப்பு மசோதாவை வரையறுக்கும் கூட்டுக் குழுவில், பொதுமக்கள் தரப்பில் 5 பேரும், அரசுத் தரப்பில் 5 பேரும் இடம்பெறுகின்றனர்.
மூலம்
தொகு- India activist Anna Hazare ends hunger strike, பிபிசி, ஏப்ரல் 9, 2011
- Indian activist ends indefinite fast, அல்ஜசீரா, ஏப்ரல் 9, 2011