இசுரேலில் ரோமர் காலத்து சிலை கண்டுபிடிக்கப்பட்டது

சனி, திசம்பர் 18, 2010

இசுரேலின் கரையோரப் பகுதி ஒன்றில் அண்மையில் இடம்பெற்ற புயல் ஒன்றை அடுத்து அங்கு புதைந்திருந்த ரோமப் பேரரசுக் காலத்துச் சிலை ஒன்று வெளியே வந்துள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.


வெள்ளைச் சலவைக்கல்லினால் ஆன பெண்ணின் சிலை ஆஷ்கெலன் என்ற நகரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது 1,800 முதல் 2,000 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என இசுரேலின் தொல்பொருள் ஆய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.


ரோமர் காலத்து செய்சாரியா நகரம்

இச்சிலை 200 கிலோகிராம் எடையுள்ளதாகவும், 1.2 மீற்றர் உயரம் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இச்சிலையின் தலை, மற்றும் கைகள் அகற்றப்பட்ட நிலையில் காணப்படுகின்றது. ஆனாலும், இச்சிலையில் அழகாகச் செதுக்கப்பட்ட காலணிகள் காணப்படுப்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் நடமாடிய ஒருவரினால் இச்சிலை கண்டுபிடிக்கப்பட்டதாக இசுரேலிய தொல்பொருள் திளைக்கள அதிகாரி யோலி சுவார்ட்ஸ் தெரிவித்தார்.


இச்சிலை தற்போது மேலதிக ஆய்வுக்காக அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளது. சென்ற வாரம் இடம்பெற்ற புயல் செய்சாரியா என்ற ரோமன் காலத்துப் பழைய துறைமுக நகரைப் பெரிதும் சேதப்படுத்தியுள்ளது.


மூலம்

தொகு