ஆ. ராசாவின் காவல் மேலும் மூன்று நாட்கள் நீட்டிப்பு

செவ்வாய், பெப்பிரவரி 15, 2011

அலைக்கற்றை ஊழல் வழக்கில் இரு வாரங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்ட இந்தியாவின் முன்னாள் நடுவண் தொலைத் தொடர்பு அமைச்சர் ஆண்டிமுத்து ராசா மூன்றாவது முறையாக நேற்று மீண்டும் பாட்டியாலா நீதிமன்றத்தில் ஒப்புவிக்கப்பட்டு, நடுவண் புலனாய்வு அமைப்பின் கோரிக்கைக் கிணங்க மேலும் மூன்று நாள்கள் காவல் நீட்டிப்பிற்கு நீதி மன்றத்தால் இசைவு வழங்கப்பட்டுள்ளது.


அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அரசுக்கு ரூ.1,76,௦௦௦ கோடி இழப்பு ஏற்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு ஆ. ராசா உட்பட மூவர் நடுவண் புலனாய்வு அமைப்பால் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.


இந்நிலையில் நடுவண் புலனாய்வு அமைப்பின் காவல் முடிந்தவுடன் ராசா தவிர மீதி இரண்டு பேரும் நீதிமன்றக் காவலில் திகார் சிறைக்கு அனுப்பப்பட்டுவிட்டனர். ராசா மட்டும் முரண்பாடான தகவல்களைத் தருவதால் மீண்டும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்ற நடுவண் புலனாய்வு அமைப்பின் கோரிக்கைக்கு இணங்க காவல் நீட்டிப்பு செய்யப்பட்டு நடுவண் புலனாய்வு அமைப்பின் காவலிலேயே வைக்கப்பட்டு இருந்தார்.


இந்த விசாரணையின் தேவையைக் கருத்தில் கொண்டு, முறைகேடாக அலைக்கற்றை ஒதுக்கீடு பெற்றதில் நேரடியாகத் தொடர்புடைய மும்பையைச் சேர்ந்த எடிசலாட் நிறுவனத்தின் உரிமையாளரும், பெரும் செல்வந்தருமான பல்வாவும் பின்னர் நடுவண் புலனாய்வு அமைப்பால் கைது செய்யப்பட்டார்.


இந்த இருவரையும் வைத்து நேரடியாக விசாரணை நடத்திய நடுவண் புலனாய்வு அமைப்பினர், இவ்விருவருக்கும் காவல் முடிந்ததால் நேற்று இருவரையும் பாட்டியாலா நீதிமன்றத்தில் ஒப்புவித்து, இந்த விசாரணையில் மேலும் பல தகவல்கள் தேவைப்படுவதால் இவர்கள் இருவரையும் மீண்டும் தங்கள் காவலில் வைத்து விசாரிக்க இசைவு அளிக்கும் படி நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தனர். இதற்கு ராசாவின் வழக்குரைஞரும், பல்வாவின் வழக்குரைஞரும் எதிர்ப்புத் தெரிவித்தும், நடுவண் புலனாய்வு அமைப்பின் வழக்குரைஞரின் கோரிக்கை சரியானது எனக் கருதிய நீதிமன்றம் ராசாவை மேலும் மூன்று நாள்களுக்கும், பல்வாவை நான்கு நாள்களுக்கும் நடுவண் புலனாய்வு அமைப்பின் காவலில் வைத்திருக்க இசைவு தெரிவித்தது.


எந்த ஒரு புலனாய்வு அமைப்பும், ஒருவரைக் கைது செய்தால் அதிக அளவாக 14 நாள்கள் மட்டும் தங்கள் காவலில் வைக்க முடியும் என்ற 'உச்ச' நீதிமன்றத்தின் ஆணையின் காரணமாக இனிமேலும் ராசாவுக்குக் காவல் நீட்டிப்புக் கோர முடியாது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

மூலம் தொகு