ஆஸ்திரேலியாவில் அமெரிக்க மருத்துவர் பட்டேல் மீது கொலைக்குற்றம் நிரூபிக்கப்பட்டது

செவ்வாய், சூன் 29, 2010

அமெரிக்க சத்திரசிகிச்சை நிபுணர் ஆஸ்திரேலியாவில் பணி புரியும் போது மூன்று நோயாளிகளின் இறப்பிற்குக் காரணமாக இருந்ததாக இன்று ஆஸ்திரேலிய நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.


இந்தியாவில் குஜராத்தில் பிறந்த அமெரிக்க குடியுரிமை பெற்ற மருத்துவர் ஜெயந்த பட்டேல் 2003 - 2005 காலப்பகுதியில் குயின்ஸ்லாந்து மருத்துவமனை ஒன்றில் பணிபுரிந்தார். இவர் ஆஸ்திரேலிய ஊடகங்களினால் "Dr Death" என வருணிக்கப்படுகிறார்.


இவர் வேறொரு நோயாளிக்கு உடல் ரீதியாக தீங்கு விளைவித்தார் என்னும் நான்காவது குற்றச்சாட்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இவர் மீதான தீர்ப்பு அடுத்த வியாழக்கிழமை அன்று அறிவிக்கப்படவிருக்கிறது.


டாக்டர் பட்டேல் சத்திர சிகிச்சைகளை மேற்கொண்ட போது திறமையின்மை, மற்றும் ஐக்கிய அமெரிக்காவில் தடை செய்யப்பட்ட மருத்துவ முறைகளை ஆஸ்திரேலியாவில் மேற்கொண்டமை போன்ற குற்றச்சாட்டுக்கள் மீது விசாரணை நடத்தப்பட்டன.


50 மணி நேர ஆலோசனைக்குப் பின்னர் 12 பேரடங்கிய ஜூரிகள் இக்குற்றச்சாட்டுக்களை ஏற்றுக் கொண்டனர்.


பண்டபேர்க் அரசு மருத்துவமனையில் சத்திரசிகிச்சைப் பிரிவின் பணிப்பாளராக இருந்தபோது ஜெரி கெம்ப்ஸ், ஜேம்ஸ் பிலிப்ஸ், மேர்வின் மொரிஸ் ஆகிய நோயாளிகளின் இறப்புக்குக் காரணமான சத்திரசிகிச்சைகளை மேற்கொண்டமை, மற்றும் இயன் வோல்ஸ் என்பவர் மீது உடல் ரீதியாக தீங்கு விளைவித்தமை போன்ற குற்றச்சாட்டுக்களை மருத்துவர் பட்டேல் மறுத்திருந்தார்.


ஆஸ்திரேலியாவில் இவர் மீது கைது செய்வதற்கான பிடி விறாந்து பிறப்பிக்கப்படட்தை அடுத்து இவர் 2008 ஆம் ஆண்டு அமெரிக்காவில் வைத்து கைது செயப்பட்டு ஆஸ்திரேலியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்.


ஜூரிமார்களின் முடிவு அறிவிக்கப்பட்டவுடன் பட்டேலின் மனைவி கண்ணீருடன் நீதிமன்றத்தை விட்டு வெளியேறியதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தொடர்புள்ள செய்திகள்

தொகு

மூலம்

தொகு