ஆர்மீனிய நாடாளுமன்றத் தேர்தலில் அரசுத்தலைவரின் குடியரசுக் கட்சி வெற்றி

புதன், மே 9, 2012

ஆர்மீனியாவின் நாடாளுமன்றத் தேர்தல்களில் அரசுத்தலைவர் சேர்சு சர்கிசியானுக்கு ஆதரவான குடியரசுக் கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றியது. குடியரசுக் கட்சி 44 வீத வாக்குகளையும், ஆளும் கூட்டணியின் மற்றொரு கட்சியான சுபிட்சமான ஆர்மீனியக் கட்சி 30 வீத வாக்குகளையும் பெற்றது.


கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தேர்தல்களின் முடிவுகள் திங்களன்று அறிவிக்கப்பட்டன. எதிர்க்கட்சிகளில் ஆர்மீனியத் தேசியக் காங்கிரசு மூன்றாவதாக 7 வீத வாக்குகளை மட்டுமே பெற்றது.


தனது அயல்நாடான அசர்பைஜானுடன் முறிந்து போன அமைதிப் பேச்சுக்களைத் தொடருவதற்கும் துருக்கியுடனான எல்லைகளை மீளத் திறப்பதற்கும் இந்தத் தேர்தல் வெற்றி அரசுத்தலைவருக்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தேர்தலில் சில முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக தேர்தல் கண்காணிப்புக் குழு கருத்து தெரிவித்துள்ளது. அரசுக்கு ஆதரவான பிரச்சாரத்தில் அரசு ஊழியர்கள் பயன்படுத்தப்பட்டதாக அவர்கள் தெரிவிக்கிறார்கள்.


ஆர்மீனியாவின் மக்கள்தொகை 2.9 மில்லியன்கள் ஆகும். அதெ வேளையில் நாட்டுக்கு வெளியே அமெரிக்கா, பிரான்ஸ், உருசியா உட்படப் பல நாடுகளில் 5 மில்லியன் ஆர்மீனியர்கள் வசிக்கிறார்கள்.


மூலம் தொகு