ஆர்மீனிய எல்லையில் ஐந்து அசர்பைஜானிய இராணுவத்தினர் சுட்டுக் கொல்லப்பட்டனர்

செவ்வாய், சூன் 5, 2012

தமது எல்லைப் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலையில் ஐந்து இராணுவத்தினர் ஆர்மீனிய இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் அசர்பைஜான் பாதுகாப்பு அமைச்சு குற்றம் சாட்டியுள்ளது. நேற்று இதே எல்லைப் பகுதியில் மூன்று ஆர்மீனிய இராணுவத்தினர் கொல்லப்பட்டமைக்கு எதிர்த் தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது.


இக்குற்றச்சாட்டு குறித்து ஆர்மீனியா உடனடியாக பதில் எதுவும் அளிக்கவில்லை. 1990களில் இந்த இரண்டு முன்னாள் சோவியத் நாடுகளுக்கிடையே சர்ச்சைக்குரிய நகர்னோ-கரபாக் பிராந்தியம் மீதான போர் இடம்பெற்றது. தற்போது இரு நாடுகளுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் நடைமுறையில் உள்ளது.


இப்பகுதிக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அரசுச் செயலர் இலறி கிளிண்டன் இரு நாடுகளையும் அமைதி பேணக் கேட்டுக் கொண்டுள்ளார். இவர் இன்று செவ்வாய்க்கிழமை ஆர்மீனியாவில் இருந்து ஜோர்ஜியா வருகின்றார். நாளை அசர்பைஜான் செல்லவிருக்கிறார்.


ஆர்மீனியர்களைப் பெரும்பான்மையாகக் கொண்டுள்ள நகர்னோ-கரபாக் பிராந்தியம் 1880களின் இறுதியில் அசர்பைஜானில் இருந்து பிரிவதாக அறிவித்தை அடுத்து ஆர்மீனியாவுக்கும் அசர்பைஜானுக்கும் இடையே போர் மூண்டது. 1988 முதல் 1994 வரை இடம்பெற்ற இந்த உள்நாட்டுப் போரில் இர பக்கத்திலுமாக 30,000 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இது இப்போது ஆர்மீனியாவின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. இரண்டு தசாப்தங்களாக உருசியா அமைதி பேச்சுக்களை நடத்தி வருகிறது.


இதே வேளையில், ஆர்மீனிய, அசர்பைஜானிய வெளியுறவுத்துறை அமைச்சர்களுக்கிடையே சூன் 18 ஆம் நாள் பார்சில் சர்ச்சைக்குரிய பிராந்தியம் தொடர்பாக அமைதி பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்ள்டுளது.


மூலம் தொகு