ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெச்ரிவால் தில்லி முதல்வர் பதவியைத் துறந்தார்

This is the stable version, checked on 23 சூலை 2018. Template changes await review.

சனி, பெப்பிரவரி 15, 2014

இந்தியாவின் தில்லி சட்டமன்றத்தில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியினால் ஊழலுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட ஜன் லோக்பால் சட்டமூலம் நிறைவேற்ற முடியாததால் அக்கட்சியின் தலைவரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கெச்ரிவால் தமது முதல்வர் பதவியைத் துறப்பதாக நேற்று வெள்ளிக்கிழமை அறிவித்தார். இதன் மூலம் ஆம் ஆத்மி கட்சியின் 49 நாள் ஆட்சி முடிவுக்கு வந்தது.


அரசியல்வாதிகள், மற்றும் அரசு ஊழியர்களுக்கு எதிராக சுமத்தப்படும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கு சுதந்திரமான மக்கள் குழு ஒன்றை அமைக்கும் சட்டமூலமே ஜன் லோக்பால் மசோதா ஆகும். நடுவண் அரசின் ஒப்புதல் பெறாமல் இச்சட்டமூலத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்ற முடியாது என எதிர்க்கட்சிகள் வாதிட்டனர்.


சட்டமூலத்தை சட்டமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு காங்கிரஸ், மற்றும் பாரதீய ஜனதா கட்சி ஆகியன எதிர்த்தன. வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது சட்டமூலத்திற்கு ஆதரவாக ஆம் ஆத்மி கட்சியின் 27 உறுப்பினர்கள் வாக்களித்தனர். 42 உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தனர்.


தமது ஆதரவாளர்களிடையே கெச்ரிவால் உரையாற்றும் போது, "நாட்டில் பெருகி வரும் ஊழலை ஒழிக்க எமது ஆட்சியால் முடியவில்லை. தில்லி முதல்வர் பதவியைத் துறந்து விட்டு, சட்டமன்றத் தேர்தலை புதிதாக சந்திப்பது என எமது கட்சி முடிவு செய்துள்ளது," எனத் தெரிவித்தார்.


மூலம்

தொகு