ஆப்கானியப் பொதுமக்களின் உயிரிழப்புக்கு ஆத்திரேலியப் படைவீரர்கள் மீது குற்றச்சாட்டு

திங்கள், செப்டெம்பர் 27, 2010

ஆப்கானித்தானில் இடம்பெற்ற தாக்குதல் ஒன்றில் ஆறு பொதுமக்கள் உயிரிழந்து மேலும் நால்வர் காயமடைந்த நிகழ்வுக்கு ஆஸ்திரேலியாவின் முன்னாள் சிறப்புப்படை வீரகள் மூவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


2009 பெப்ரவரியில் இவர்கள் உருஸ்கான் மாகாணத்தில் ஒரு குடியிருப்பு மனை மீது தலிபான் தலைவர் ஒருவர் ஒளிந்திருக்கிறார் என்ற தகவலின் அடிப்படையில் இரவு நேரத் திடீர்த் தாக்குதல் ஒன்றை மேற்கொண்டனர். அவர்கள் தவறுதலாக வேறொரு குடிமனை மீது தாக்குதலை நடத்தியதில் பொதுமக்கள் உயிரிழந்தனர். இறந்தவரக்ள் ஐவர் குழந்தைகள் ஆவர்.


நோக்கம் இல்லாக் கொலை, மற்றும் ஆபத்தான நடவடிக்கை ஆகிய குற்றச்சாட்டுக்கள் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது.


இராணுவக் குற்றவழக்குத் தொடருனரின் மேலாளர் இந்தக் குற்றச்சாட்டுக்களை இவர்கள் மீது அறிவித்திருக்கிறார். பொதுவான சட்ட ஆணையை மீறியமை, மற்றும் பாரபட்சமான நடவடிக்கை போன்ற குற்றச்சாட்டுக்களும் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது.


தாக்குதலுக்கு அடுத்த நாள் ஆத்திரேலிய பாதுகாப்புத்துறை அமைச்சு வெளியிட்ட அறிக்கையில், தமது வீரர்கள் துப்பாக்கிச் சூடு, மற்றும் கிறனேடுகள் மூலம் தாக்குதல் "விடுவிப்பு நடவடிக்கை" மேற்கொண்டபோதே இறப்புகள் ஏற்பட்டன எனத் தெரிவித்திருந்தது. அத்துடன் தாலிபான்கள் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர் என்றும் தற்காப்புக்காகப் படையினர் திருப்பிச் சுட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.


நீண்டகாலமாக இடம்பெற்ற விசாரணைகளின் பின்னர் இம்மூவர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவர்களில் இருவர் தாம் தமது நடவடிக்கையை நியாயப்படுத்துவோம் எனத் தமது வழக்கறிஞர்கள் மூலம் தெரிவித்துள்ளனர்.

மூலம்